புதிய மாவட்டத்திற்கு அரக்கோணத்தை தலைநகரமாக அறிவிக்கக்கோரி ஆக. 26-இல் கடையடைப்பு

அரக்கோணம் வட்டத்தை புதிய மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கக்கோரி ஆகஸ்ட் 26-ஆம் தேதி அரக்கோணத்தில்

அரக்கோணம் வட்டத்தை புதிய மாவட்டத் தலைநகரமாக அறிவிக்கக்கோரி ஆகஸ்ட் 26-ஆம் தேதி அரக்கோணத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அரக்கோணம் அனைத்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.  
இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் அரக்கோணம் அனைத்து வணிகர் சங்க அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் வேலூர் மாவட்டத் தலைவர் கே.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார். 
இதில் நகர ஜவுளி வணிகர்கள் சங்கத் தலைவர் பெ.இளங்கோ, நகை வணிகர்கள் சங்கத் தலைவர் எம்.எஸ்.மான்மல், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் து.மகேஷ், மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் ஆ.ஹரி, பாத்திர வணிகர்கள் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன், ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கச் செயலர் ஜி.சி.குப்தா, பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் சாய், ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி, அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவர் குணசீலன், அரிமா சங்க நிர்வாகிகள் கமல், வெங்கடநரசிம்மன், தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்: 
வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட வேண்டும் என்றும், பிரிக்கப்படும் புதிய மாவட்டங்களுக்கு திருப்பத்தூரையும், அரக்கோணத்தையும் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உறுதிப்படுத்தி இருந்தனர். 
ஆனால் சுதந்திர தின உரையில் தமிழக முதல்வர், புதிய மாவட்டத்திற்கு ராணிப்பேட்டை தலைநகராக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். வேலூருக்கு அடுத்து மிக முக்கிய நகரமாக விளங்கி வருவது அரக்கோணம்.
 பல்வேறு முக்கிய அரசு நிறுவனங்கள், படைத்தளங்கள், தொழிற்சாலைகள், முக்கிய ரயில்நிலையம் இங்கு அமைந்துள்ளன. 
எனவே அரக்கோணம் நகரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆகஸ்ட் 26-ஆம் தேதி திங்கள்கிழமை அரக்கோணம் நகரில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும். இதற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com