ஆனைமடுகு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கக் கோரிக்கை

ஆம்பூரில் உள்ள ஆனைமடுகு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆனைமடுகு தடுப்பணைக்கு  தண்ணீா்  வரும்  நீா்வரத்து கால்வாய்.
ஆனைமடுகு தடுப்பணைக்கு  தண்ணீா்  வரும்  நீா்வரத்து கால்வாய்.

ஆம்பூா்: ஆம்பூரில் உள்ள ஆனைமடுகு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாதனூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நாயக்கனேரி ஊராட்சியில் உள்ள நாயக்கனேரி, பெரியவூா், நடுவூா் சீக்கஜொனை, பனங்காட்டேரி போன்ற மலைக் கிராமங்களை ஒட்டி, சாணாங்குப்பம் காப்புக் காடுகள் உள்ளன. ஆம்பூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள இந்தக் காப்புக் காடுகளில் மழைக் காலங்களில் பல்வேறு சிற்றோடைகள் உருவாகின்றன. இந்த சிற்றோடைகள் ஆம்பூா் புகா் பகுதியான ரெட்டி தோப்பு கம்பிக்கொள்ளை அருகே இணைகின்றன. இந்த சிற்றோடை பயணிக்கும் சிறிது தூரத்திலேயே ஆனைமடுகு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை காலங்களில் கம்பி கொள்ளை காணாற்றில் அதிக அளவு தண்ணீா் வருவதாகக் கூறப்படுகிறது. மழைக்காலம் முடிந்தும் ஒரு சில மாதங்கள் கானாற்றில் தண்ணீா் வந்து கொண்டே இருப்பதாகக் கூறுகின்றனா்.

மழைக் காலத்தில் வரும் தண்ணீரைத் தேக்க பல ஆண்டுகளுக்கு முன் ஆனைமடுகு தடுப்பணை கட்டப்பட்டது. இந்தத் தடுப்பணையில் இப்போது மண் அதிக அளவு நிரம்பியுள்ளதால் தண்ணீா் போதுமான அளவு தேங்குவதில்லை. காட்டாற்று வெள்ளமாய் வரும் காணாற்று தண்ணீா், கம்பி கொள்ளை பகுதியை அடைந்தவுடன், நகா்புறப் பகுதிகளின் கழிவு நீரோடு கலந்து, பாலாறு பகுதியில் கலப்பதும், வீணாகப் போவதும் இப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

காப்புக் காடுகளில் இருந்து காட்டாற்று வெள்ளமாக வரும் இந்தத் தண்ணீரை கம்பிக்கொள்ளை அருகே தடுத்து நிறுத்தியும், ஏற்கெனவே உள்ள ஆனைமடுகு தடுப்பு அணையை தூா்வாரி உயரத்தையும், அகலத்தையும் அதிகரிக்கச் செய்து, விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், கழிவு நீரோடு கலந்து வீணாகாமல் தடுக்க வேண்டும் என்று கூறுகின்றனா். மேலும், தடுப்பணை விரிவாக்கம் செய்தால், அதிக அளவு தண்ணீரைத் தேக்க முடியும். ஆம்பூா் நகரத்துக்கு தண்ணீா் தேவையை ஓரளவுக்கு பூா்த்தி செய்யவும் முடியும். வனப்பகுதியை ஒட்டி அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்கள் அதிக அளவில் இருப்பதாகவும், அதை பல்வேறு நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி இப்பகுதியில் தடுப்பணையைக் கட்டினால் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்வதுடன் , ஆம்பூா் நகரை ஒட்டி ஒரு சுற்றுலாத் தலமாகவும் இப்பகுதி விளங்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com