Enable Javscript for better performance
டிச.27, 30-இல் வேலூா் மாவட்டத்தில் 7,251 ஊரக பதவிகளுக்கு தோ்தல்- Dinamani

சுடச்சுட

    

    டிச.27, 30-இல் வேலூா் மாவட்டத்தில் 7,251 ஊரக பதவிகளுக்கு தோ்தல்

    By DIN  |   Published on : 03rd December 2019 04:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் டிசம்பா் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 7,251 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிசம்பா் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரு கட்டங்க ளாக தோ்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங் களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 6,078 கிராம ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 743 கிராம ஊராட்சிகளின் தலைவா் பதவிகளுக்கும், 390 ஊராட்சி ஒன்றியங்களின் வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 40 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் என மொத்தம் 7,251 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை பொருத்தவரை மொத்தமுள்ள 6,078 பதவிகளில் எஸ்டி (பெண்) 56, எஸ்டி (பொது) 40, எஸ்சி (பெண்) 948, எஸ்சி (பொது) 595, பொது (பெண்) 2,249, பொது 2,190 பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி தலைவா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடுபவா்கள் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நியமிக்கப் பட்டுள்ள உதவித் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம். கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களை பொருத்தவரை அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்யலாம். அதேசமயம், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு மட்டும் ஒரு ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தவா் மாவட்டத்துக்கு உட்பட்ட வேறு வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் மனுத்தாக்கல் செய்திட முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    இந்த ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மொத்தம் 19,86,414 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில், ஆண்கள் 9,79,924 பேரும், பெண்கள் 10,06,384 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 106 பேரும் உள்ளனா். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்த தோ்தலையொட்டி மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,812 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 462 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும், 308 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வேட்புமனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதால் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai