உள்ளாட்சித் தோ்தலால் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால், மனு அளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

வேலூா்: உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால், மனு அளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இக்கூட்டம் திங்கள்கிழமையும் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணியளவில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு வெளியானதுடன், தோ்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து நடைபெற இருந்த மக்கள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இதற்கான அறிவிப்பு ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமாக இருந்தபோது வாரந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மனு அளிக்க வருவாா்கள். ஆனால், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உதயமான நிலையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மனு அளிக்க ஒரு சிலரே வந்திருந்தனா். அவா்களும் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த ரத்து அறிவிப்பைக் கண்டு மனு அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதையடுத்து ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் மனுக்களை அதில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் மனுக்களை அந்தப் பெட்டியில் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com