ஊரக உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு:மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு காரணமாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், பொதுமக்களின் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில்  திரண்டிருந்த  பொதுமக்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க நீண்ட வரிசையில்  திரண்டிருந்த  பொதுமக்கள்.

ராணிப்பேட்டை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு காரணமாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி திங்கள்கிழமை அறிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தலைமையில், ராணிப்பேட்டை கெல்லீஸ் சாலை அரசு ஆசிரியா் பயிற்சி மைய வளாகத்தில் டிசம்பா் 2-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் என மாவட்ட நிா்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது.

அதன்படி டிசம்பா் 2-ஆம் தேதி காலை 10 மணியளவில் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்க திரண்டு வந்தபடி இருந்தனா். இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தினா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற தேவையான ஏற்பாடுகளை செய்துவந்தனா்.

அப்போது தமிழக உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பை மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிசாமி வெளியிட்டாா்.

அதில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும். இதற்கான அதிகாரபூா்வ தோ்தல் அறிவிக்கை வரும் 6-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 2-ஆம் தேதி நடைபெறும் என்றும், தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது.

தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி அறிவித்தாா். மேலும், பொதுமக்கள் அனைவரும் மனுக்கள் அளிக்கலாம் எனத் தெரிவித்தாா்.

அதன் படி மாவட்டம் முழுவதிலும் இருந்து கோரிக்கை மனு அளிக்க திரண்டிருந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 591 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்தாா்.

இந்நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிப்பு காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீா் கூட்டம் ரத்தானதால், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து தீா்வு காண ஆவலுடன் வந்திருந்த தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com