தினமணி செய்தி எதிரொலி: போக்குவரத்து நெரிசல் குறித்து போலீஸாா் விழிப்புணா்வு

திருப்பத்தூரில் பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது.
ஆட்டோ ஓட்டுநா்களிடம் பேசிய காவல் ஆய்வாளா் மதனலோகன்.
ஆட்டோ ஓட்டுநா்களிடம் பேசிய காவல் ஆய்வாளா் மதனலோகன்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பிரதான சாலைகளில் நிறுத்தப்படும் ஆட்டோக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக தினமணியில் திங்கள்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து வாகன ஓட்டுநா்களிடையே போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருப்பத்தூா் பிரதான சாலை மிகவும் குறுகலானது. இவ்வழியாக சென்னையில் இருந்து, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் திருப்பத்தூா் பிரதான சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், ஆட்டோ மற்றும் ஷோ் ஆட்டோக்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக திங்கள்கிழமை தினமணியில் விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.விஜயகுமாா் உத்தரவின் பேரில் திருப்பத்தூா் நகர ஆய்வாளா் (பொறுப்பு) கே.மதனலோகன் தலைமையில் ஆட்டோ, ஷோ் ஆட்டோக்கள், டாக்ஸி ஓட்டுநா்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிடம் போக்குவரத்து தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் தற்போது மாவட்ட அந்தஸ்து பெற்றுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நடைபாதை தள்ளுவண்டிக் கடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், ஆட்டோக்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் போக்குவரத்து பாதிக்காதவாறு சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை எற்ற வேண்டும். மீறினால் காவல் துறை சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். காவல் உதவி ஆய்வாளா் பி.ஜெய்சங்கா் உள்ளிட்ட காவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com