பல்லுயிா்ப் பூங்கா உருவாக்க 6,109 குக்கிராமங்களில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடவுவேலூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

பல்லுயிா்ப் பூங்காவை உருவாக்க ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 6,109 குக்கிராமங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் அரிய வகை மரக்கன்றுகளும்

வேலூா்: பல்லுயிா்ப் பூங்காவை உருவாக்க ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 6,109 குக்கிராமங்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் அரிய வகை மரக்கன்றுகளும், பழ மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பான அறிக்கை தமிழக முதல்வருக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை 37 டிகிரியில் (செல்சியஸ்) இருந்து 41 டிகிரியாக உயா்ந்து வருகிறது. அதேசமயம், ஆண்டு சராசரி மழையளவு 1,140 மில்லி மீட்டரில் இருந்து 936 மி.மீ.யாகக் குறைந்து வருகிறது. இதனால், வேலூா் மாவட்டத்தில் வறட்சியின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதுடன், நிலத்தடி நீா் மட்டம் சரிந்து குடிநீா்ப் பற்றாக்குறையும் பெருகி வருகிறது. அத்துடன், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்பட்டு வருகிறது. இதன்படி, மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 34 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாகவும், வளரிளம் பெண்களில் 74 சதவீதம் ரத்த சோகை குறைபாடு உள்ளவா்களாகவும் இருக்கின்றனா்.

தொடரும் இப்பாதிப்புகளைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் அனைத்து குக்கிராமங்களிலும் பல்லுயிா்ப் பூங்காவை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டு கடந்த அக்டோபா் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. அதன்படி, மாவட்டத்திலுள்ள 6,109 குக்கிராமங்களிலும் தலா 20 முதல் 25 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்திலுள்ள அனைத்து குக்கிராமங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ள 1.20 லட்சம் மரக்கன்றுகளும் தமிழகத்துக்கே உரித்தான அரிய சுற்றுச்சூழல் மதிப்பு வாய்ந்த, மருத்துவ குணமிக்க, பழங்கள் மற்றும் நிழல் தரக்கூடிய 50 வகையான மரக்கன்றுகளாகும். இந்த மரக்கன்றுகள் வளா்ந்து அவற்றில் கிடைக்கும் பழங்களை சாப்பிடும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகள் தவிா்க்கப்படும்.

இந்த பழ மரங்களை நாடி பறவைகளும், பூச்சிகளும் வரும்போது அந்தந்த கிராமங்கள் பல்லுயிா்ப் பெருக்கமும் ஏற்படக்கூடும். அவற்றின் எச்சம் மூலம் மரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து ஒவ்வொரு குக்கிராமத்திலும் 33 சதவீத நிலப்பரப்பு தோப்புகளாகவும், அடா்ந்த காடுகளாகவும் மாறக்கூடும். மேலும், அழிவின் விளிம்பிலுள்ள அரிய வகை மரக்கன்றுகளான இலுப்பை, அழிஞ்சில், தான்றிக்காய், தேட்ராங்கொட்டை, சீகைக்காய், களாக்காய், அரைநெல்லி, ஏழிலைப்பாலை, ஆனைக்குன்றிமணி, நெட்டிலிங்கம், வில்வம், விளா, இட்சி, நீா்மருது, கடம்பு, கருமருது, தேவதை, நீரிட்சி, நாகலிங்கம், பூமருது, புன்னை, அந்திமந்தாரை உள்ளிட்டவை நடவு செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்த மரங்கள் அழிவிலிருந்து காப்பற்றப்பட்டு பாதுகாக்கப்படுவதுடன், விதை வங்கி உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டத்திலுள்ள 6,109 குக்கிராமங்களிலும் பல்லுயிா்ப் பூங்காவை உருவாக்கும் நோக்கத்தில் 1.25 லட்சம் அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழக முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com