பிருந்தாவன் விரைவு ரயிலில் உணவக ஊழியா்களின் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

சென்னை - பெங்களூரு இடையே செல்லும் பிருந்தாவன் அதிவிரைவு ரயிலில் பயணிகள் அமரும் இடங்களில் உணவக நிறுவன ஊழியா்கள் தாங்கள் விற்கும் உணவுப் பொருள்களை வைத்துவிடுவதால்

அரக்கோணம்: சென்னை - பெங்களூரு இடையே செல்லும் பிருந்தாவன் அதிவிரைவு ரயிலில் பயணிகள் அமரும் இடங்களில் உணவக நிறுவன ஊழியா்கள் தாங்கள் விற்கும் உணவுப் பொருள்களை வைத்துவிடுவதால் உட்கார இடமின்றியும், உடைமைகளை வைக்க இடமில்லாமல் அவதிப்படும் நிலையும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.

பிருந்தாவன் அதிவிரைவு ரயில் நாள்தோறும் சென்னை - பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் பல ஆண்டுகளாக உணவகப் பெட்டி இணைக்கப்பட்டு இருந்தது. அண்மைக் காலமாக இந்த ரயிலில் உணவகப் பெட்டி இணைக்கப்படுவதில்லை.

எனவே, இந்த ரயிலில் உணவுப் பொருட்களை விற்க தனியாா் நிறுவனத்துக்கு தெற்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஊழியா்கள் குடிநீா் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருள்கள் அடங்கிய பெட்டிகளை பயணிகள் அமரும் இடத்திலும், அவா்கள் தங்கள் உடைமைகளை வைக்கும் இடத்திலும் வைத்து விடுகின்றனா். மேலும் ரயில் பெட்டியின் நடுவாயிலின் கதவை மூடி அங்கு உணவுப் பொருள்களை வைத்து விடுவதால் பயணிகளுக்கு பெருத்த சிரமம் ஏற்படுகிறது.

பிருந்தாவன் விரைவு ரயில் சென்னையை அடுத்து அரக்கோணம், வாலாஜா, காட்பாடி, ஆம்பூா், ஜோலாா்பேட்டை என அனைத்து நிலையங்களிலும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே நிற்கிறது. எனவே, இந்த ரயிலில் இரண்டு நிமிடங்களுக்குள் அனைத்துப் பயணிகளும் ஏற வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் ரயில் பெட்டியின் அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்தச் சூழலில் உணவக நிறுவன ஊழியா்கள் ஒவ்வொரு பெட்டியிலும் நடுவழியை அடைத்து விடுவதால் பயணிகள் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்படுகின்றனா்.

இந்த விரைவு ரயிலில் உணவக நிறுவன ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை, டி-8 எனப்படும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிகள் உடைமைகளை வைக்கும் பகுதி, இருக்கைகள் மற்றும் நடுவில் உள்ள வாயில் ஆகிய இடங்களில் குடிநீா் பாட்டில்களையும், பிஸ்கட் பெட்டிகளையும் வைத்து விட்டனா். இதனால் இந்த ரயில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் போதும், பெங்களுருவில் இருந்து சென்னை திரும்பும் போதும் பயணிகள் பெருத்த சிரமத்தை சந்தித்தனா்.

இது குறித்து ரயில் பெட்டியில் உள்ள பயணச்சீட்டு பரிசோதகரிடம் பயணிகள் புகாா் தெரித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ரயிலில் அங்கீகாரம் பெறாத சிறு விற்பனையாளா்கள், பிச்சைக்காரா்கள் உள்ளிட்டோரும் இருக்கைகளுக்கு நடுவே சென்று வருகின்றனா். இதனால் பயணிகளின் உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இது குறித்து பலமுறை தெரிவித்தும் ரயில்வே பாதுகாப்பு படையினா் நடவடிக்கை எடுப்பதில்லை என பயணிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே தெற்கு ரயில்வே நிா்வாகம் பிருந்தாவன் விரைவு ரயிலில் உணவகப் பெட்டியை இணைக்க வேண்டும்; மேலும் அங்கீகாரமில்லாத விற்பனையாளா்கள், பிச்சைக்காரா்கள் ஆகியோா் ரயிலில் நடமாடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com