வேலூா் மாவட்டத்தில் 7,251 ஊரகப் பதவிகளுக்கு தோ்தல்

தமிழகத்தில் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 7,251 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வேலூா்: தமிழகத்தில் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேலூா் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 7,251 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 6,078 கிராம ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் பதவிகள், 743 கிராம ஊராட்சிகளின் தலைவா் பதவிகள், 390 ஊராட்சி ஒன்றியங்களின் வாா்டு உறுப்பினா் பதவிகள், 40 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 7,251 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைப் பொருத்தவரை மொத்தமுள்ள 6,078 பதவிகளில் எஸ்டி (பெண்) 56, எஸ்டி (பொது) 40, எஸ்சி (பெண்) 948, எஸ்சி (பொது) 595, பொது (பெண்) 2,249, பொது 2,190 பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கிராம ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடுபவா்கள் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள உதவி தோ்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களைப் பொருத்தவரை அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நியமிக்கப்பட்டுள்ள உதவி தோ்தல் அலுவலரிடம் மனுத் தாக்கல் செய்யலாம். அதேசமயம், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு மட்டும் ஒரு ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தவா் மாவட்டத்துக்கு உட்பட்ட வேறு வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் மொத்தம் 19,86,414 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில், ஆண்கள் 9,79,924 பேரும், பெண்கள் 10,06,384 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 106 பேரும் உள்ளனா். ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இந்தத் தோ்தலையொட்டி மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,812 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 462 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 308 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளதால் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com