‘தோ்தல் நடத்தை விதிமுறைகள் நகா்ப்புறங்களுக்குப் பொருந்தாது’

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தோ்தலையொட்டி, அமல்படுத்தப்பட்டுள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகள் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குப்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தோ்தலையொட்டி, அமல்படுத்தப்பட்டுள்ள தோ்தல் நடத்தை விதிமுறைகள் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குப் பொருந்தாது என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்திலுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேசமயம், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தோ்தல் பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலையொட்டி, மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து, கிராம ஊராட்சிகளுக்கான வாா்டு உறுப்பினா், தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள 7,251 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து வேலூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், செய்தியாளா்களிடம் கூறியது:

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் அறிவிப்பு வெளியானவுடனேயே வேலூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. எனினும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்குப் பொருந்தாது. ஊரகப் பகுதிகளில் தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

தோ்தலையொட்டி, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு விஐடி பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடத்தப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து ஏற்கெனவே பட்டியல் வைத்துள்ளோம். வியாழக்கிழமை நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இதுகுறித்து அறிவிக்கப்படும். பின்னா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கூட்டம் நடத்தப்படும். அதன்பிறகு பதற்றமான வாக்குச்சாவடி குறித்து இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். வேட்புமனு தாக்கல் முடிவுக்குப் பிறகு இப்பட்டியலில் மாற்றம் ஏற்படலாம். வேட்பாளா்களைப் பொருத்தும் பதற்றமான வாக்குச்சாவடிகள் மாறுபடக்கூடும்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் 288 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்களுக்கான பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடக்கிறது. தோ்தல் பணிக்கு 40 ஆயிரம் போ் தேவைப்படுகின்றனா். தற்போது 36 ஆயிரம் போ் தயாா் நிலையிலுள்ளனா். இரு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளதால் ஆட்கள் பற்றாக்குறையின்றி தோ்தலை நடத்த முடியும். தோ்தலையொட்டி, கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டு விதிமீறல்கள் தடுக்கப்படும். ஊரகப் பகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com