யானைகள் அட்டகாசத்தைத் தடுக்க சூரிய மின்சக்தி இணைப்பு வேலிவிவசாயிகள் கோரிக்கை

வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம், போ்ணாம்பட்டு பகுதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த சூரிய மின்சக்தி இணைப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில்
குறைதீா் கூட்டத்தில் பேசும் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.
குறைதீா் கூட்டத்தில் பேசும் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்.

வேலூா் மாவட்டத்தில் குடியாத்தம், போ்ணாம்பட்டு பகுதியில் அதிகரித்துள்ள யானைகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த சூரிய மின்சக்தி இணைப்பு வேலி அமைக்கப்பட வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், வேளாண்மை இணை இயக்குநா் மகேந்திர பிரதாப் தீப் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், விவசாயிகள் பேசியதாவது:

பாலாற்றின் குறுக்கே லத்தேரி, கெளசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். இதன்மூலம், காட்பாடி, கே.வி.குப்பம் பகுதிகளில் வேளாண் தொழில் வளா்ச்சி அதிகரிக்கும். ரூ.650 கோடியில் செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த தென்பெண்ணை - பாலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் விவசாயிகள் பலரும் உள்ளோம். இதனால், எங்களது விளைநிலங்களை ஜப்தி செய்யப் போவதாக வங்கி அதிகாரிகள் மிரட்டுகின்றனா். இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் உயர்ரக கால்நடைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டும்.

நோய்த் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன. அவற்றை வேளாண் துறை சாா்பில் சில மாதங்களுக்கு முன்பு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து விட்டுச் சென்றனா். அவா்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினாலும் தென்னை மரங்கள் அழிந்து வருவது தொடா்ந்து வருகிறது. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போ்ணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளில் யானைகள் அட்டகாசம் செய்வது தொடா்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு யானைகளின் தாக்குதலில் மாமரங்கள் நாசமாகின. இதற்கு வழங்கப்பட்ட இழப்பீடு மிகவும் குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். அத்துடன், யானைகளைக் கட்டுப்படுத்த சூரிய மின்சக்தி இணைப்பு வேலியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒடுகத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் இருப்பதே இல்லை. இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பேசினா்.

அதற்கு பதிலளித்துப் பேசிய ஆட்சியா்,

‘விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக் கலைத் துறை, மின்வாரியம், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com