Enable Javscript for better performance
பேர்ணாம்பட்டு பேருந்து நிலையப் பிரச்னை முடிவுக்கு வருமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பேர்ணாம்பட்டு பேருந்து நிலையப் பிரச்னை முடிவுக்கு வருமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    By DIN  |   Published on : 01st February 2019 01:33 AM  |   அ+அ அ-   |    |  


    பேர்ணாம்பட்டு பேருந்து நிலையப் பிரச்னைக்கு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் விரைந்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என பேர்ணாம்பட்டு நகரவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
    வேலூர் மாவட்டத்தில், தமிழக, ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பேர்ணாம்பட்டு வட்டத்தில்  21 வார்டுகளைக் கொண்ட நகராட்சி, 51 ஊராட்சிகளைக் கொண்ட ஊராட்சி ஒன்றியம் ஆகியன அடங்கியுள்ளன. நகரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
    தற்போதைய பேருந்து நிலையம்: நகரின் மையப் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் தற்போதைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நாள்தோறும் சென்னை, பெங்களூரு, திருப்பதி, வி.கோட்டா, வேலூர் மாவட்டத்தின் பிற பகுதிகள் என பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் இப்பேருந்து நிலையம் இடநெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அத்துடன் பேருந்து நிலையப் பகுதிகளை கடைக்காரர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
    நகர்நல ஆர்வலர்கள் யோசனை: இந்நிலையில், பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் அல்லது மாற்று இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நகர மக்களால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. நகர எல்லைக்குள் பேருந்து நிலையத்துக்கு தேவையான இடம் இல்லாததால், பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள காவல் நிலைய இடத்தை பயன்படுத்தி தற்போதைய பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தலாம் என நகர்நல ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு யோசனை தெரிவித்தனர்.
    ஆட்சியர் முடிவில் மாற்றமா?: இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார். காவல் நிலையம் பழுதடைந்த கட்டடத்தில் இயங்குவதால் அதை இடித்துவிட்டு மாற்று இடத்தில் கட்ட ஏற்பாடு செய்யலாம். தற்போதைய காவல் நிலைய இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்தலாம் எனஅப்போது முடிவு செய்யப்பட்டது.
    இந்நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், கிராமப் பகுதியான  பங்களாமேடு அருகே வீட்டுமனைப் பிரிவுகளுக்காக உள்ள 8 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் பரப்பை புதிய பேருந்து நிலையம் அமைய தானமாக வழங்குவதாக தனியார் தரப்பில் கூறியதாகவும், இதற்கு அரசியல் பிரமுகர்கள் சிலரும், உள்ளூர் அதிகாரிகளும் சிலரும் உடந்தையாக செயல்பட்டு ஆட்சியரை கட்டாயப்படுத்தி அப்பகுதியில் பேருந்து நிலையத்தை அமைக்க முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இருப்பினும் இபுதிய பேருந்து நிலையம் அப்பகுதியில் அமையவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் துவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
    பொதுமக்கள் எதிர்ப்பு: இதனால் நகர மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கு வசதியற்ற தொலைதூரத்தில் தனித்து அமைந்துள்ள பங்களாமேடு பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைவதற்கு நகர மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற இடம் என்பதோடு, நகர பகுதிக்குள் வர ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனப் போக்குவரத்தை நம்ப வேண்டிய சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
    வீட்டுமனை விற்பனை அமோகம்: இந்நிலையில், பங்களாமேடு பகுதியில், ஆட்சியரால் தேர்வு செய்யப்பட்ட பேருந்து நிலையம் செல்லும் வழி என்ற பெயர்ப் பலகையும், மனைப் பிரிவு முகப்பில் பிரதான வளைவு அமைத்து அதில் புரட்சித் தலைவி அம்மா பேருந்து நிலையம்' என்று பெயரும் பதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தி அப்பகுதி மனைகள் பல மடங்கு விலை உயர்த்தப்பட்டு மும்முரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 
    இதையடுத்து திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சினர், தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய மீட்புக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அத்துடன் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் இதுதொடர்பான கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.
    இதைத் தொடர்ந்து உள்ளூர் மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இருமுறை பேர்ணாம்பட்டிலும், ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடத்தப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதை விரும்பவில்லை. பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்தால் 8 ஆயிரம் மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு செல்வோர், வங்கிகள், அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் பாதிப்பை சந்திக்கும் சூழல் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர். எனினும் இதை மாவட்ட நிர்வாகம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை என்று மீட்புக் குழுவினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
    புதிய முயற்சி: தற்போதைய பேருந்து நிலையம் அருகே சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பில் இயங்கி வந்த அரசு மருத்துவமனைக்கு மாற்று இடத்தில் புதியக் கட்டடம் கட்டப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
    இந்நிலையில் பழைய அரசு மருத்துவமனை இடத்தை பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதையாவது அரசு பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர் நகர மக்கள்.
    தனியார் சிலரின் முயற்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வளைந்துகொடுத்து விடக் கூடாது. இவ்விஷயத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரும், மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் நலனைக் காக்க வேண்டும் என்பதே பேர்ணாம்பட்டு நகர மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp