கர்நாடக அரசுப் பேருந்து, ஓட்டுநர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
By DIN | Published On : 02nd February 2019 12:57 AM | Last Updated : 02nd February 2019 12:57 AM | அ+அ அ- |

வாணியம்பாடி அருகே கர்நாடக அரசுப் பேருந்து மற்றும் அதன் ஓட்டுநரைத் தாக்கிய திமுக நகரப் பொறுப்பாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களில் 2 பேரைக் கைது செய்தனர்.
வேலூரிலிருந்து பெங்களூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கர்நாடக அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் குமரவேல் (57) ஓட்டிச் சென்றார்.
வேலூர் அருகே பின்னால் வேகமாக வந்த கார் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, பேருந்து ஓட்டுநர் வழிவிடாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்தவர்கள் வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் அருகே பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநர் குமரவேலை சரமாரியாகத் தாக்கினர். மேலும், பேருந்து மீது கற்கள் வீசியதால் கண்ணாடி சேதமடைந்தது. இதில் இருந்த பயணிகள் 4 பேர் லேசான காயமடைந்தனர். பிறகு காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி முரளி மற்றும் போலீஸார் அங்கு சென்று பலத்த காயமடைந்த ஓட்டுநர் குமரவேலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து குமரவேல் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் காரில் வந்தவர்கள் வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளர் சாரதிகுமார், ராஜேஷ், சிவா, அப்பு, பிரவீண் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதில் ராஜேஷ், சிவா ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரைத் தேடி வருகின்றனர்.