ரூ.1 கோடி செம்மரக் கட்டை கடத்தல் வழக்கு:  சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

காட்பாடி அருகே திங்கள்கிழமை ரூ.1 கோடி மதிப்புடைய செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டது தொடர்பான

காட்பாடி அருகே திங்கள்கிழமை ரூ.1 கோடி மதிப்புடைய செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு, காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் பரிந்துரையின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 
செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகளில் கைதாகி சமீபத்தில் வெளிவந்துள்ள குற்றவாளிகளை குற்ற நுண்ணறிவுப் பிரிவு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே சந்திரகிரி போலீஸாரால் செம்மரக் கட்டை கடத்தல் வழக்கில் கைதாகி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த  காட்பாடி கரசமங்கலத்தைச் சேர்ந்த அமானுல்லா(32) என்பவரை ஓசிஐயூ போலீஸார் கண்காணித்து வந்தனர். அப்போது, அமானுல்லா மீண்டும் செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்தது.
இதனிடையே,  டிஎஸ்பி ரவீந்திரன், ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட போலீஸார் காட்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திரத்தில் இருந்து பரதராமி, பனமடங்கி வழியாக வந்த  சரக்கு வேனை மடக்கி சோதனையிட்டதில் அதில் சுமார் 2 டன் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது. 
அந்த வேனில் இருந்த 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செம்மரக் கட்டைகளை கரசமங்கலத்தில் உள்ள அமானுல்லாவின் வீட்டுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. தொடர்ந்து, அமானுல்லா வீட்டுப் பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டிலும் சுமார் 2.5 டன் செம்மரக்கட்டைகள் இருந்தன. 
இதையடுத்து, ரூ.1 கோடி மதிப்புடைய 4.5 டன் செம்மரக்கட்டைகள் மற்றும் சரக்கு வேனை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட அமானுல்லா, அதே பகுதியைச் சேர்ந்த மயூப் பாஷா(20), பைரோஸ்(21), ஜோதீஸ்(25), குடியாத்தம் தர்ணாம்பேட்டையைச் சேர்ந்த அஸ்லாம்(28) ஆகிய 5 பேரை அவர்கள் கைது செய்தனர். இதுதொடர்பாக லத்தேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் 2 டிஎஸ்பிக்கள், 3 ஆய்வாளர்கள் அடங்கிய 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  
இதனிடையே, வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (கலால்) தங்கவேலு, 3 ஆண்டுகளுக்கு முன்பு செம்மரக் கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காட்பாடி அருகே திங்கள்கிழமை ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்திலும் முக்கியப் புள்ளிகள் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. 
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையையும் சிபிசிஐடிக்கு மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், தமிழக காவல் துறை இயக்குநருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதை ஏற்று இந்த வழக்கும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com