தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
By DIN | Published On : 15th February 2019 06:03 AM | Last Updated : 15th February 2019 06:03 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் பணியாற்ற அலுவலர்களுக்கு பயிற்சிப் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பயிற்சி முதல் கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் வட்டாட்சியர் நிலையில் 3 அலுவலர்களுக்கு அளிக்கப்படுகிறது.
அவர்கள் மூலமாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதில், தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், தொடங்கி வைத்துப் பேசியது:
நம் நாட்டில் தேர்தல் என்பது வாக்குச்சீட்டு முறையில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரம் வரை மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்து கொள்ளும் விதமாக நவீன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தவை. இதில் எந்தப் பிரச்னைகளும் ஏற்படாது என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இந்த இயந்திரங்கள் மீது அலுவலர்கள் தங்களுக்கு உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். மண்டல அளவிலான தேர்தல் பணியாளர்கள் பயிற்சியை முறையாகக் கேட்டறிந்து வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நல்ல பயிற்சியை வழங்கி தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மாநில அளவிலான தலைமை பயிற்சியாளரும், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநருமான தீபக் ஜேக்கப், அலுவலர்களுக்கு பயிற்சியை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், தேர்தல் நேர்முக உதவியாளர் நாராயணன், தேர்தல் வட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.