பிரசவத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
By DIN | Published On : 15th February 2019 06:05 AM | Last Updated : 15th February 2019 06:05 AM | அ+அ அ- |

வேலூர் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்தவர் கௌதம்ராஜ். பொறியாளரான இவரின் மனைவி கோகிலா (24) . கர்ப்பிணியாக இருந்த இவருக்கு உடல்நிலை காரணமாக 7-ஆவது மாதத்தில் குழந்தை பிரசவிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து கோகிலா வேலூர்-ஆற்காடு சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கடந்த 7 நாள்களுக்கு முன்பு பிரசவம் செய்யப்பட்டது. அப்போது, கோகிலாவுக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து கோகிலாவின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது கணவர், உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், சென்னை தனியார் மருத்துவமனைக்கு இதயமும், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிறுநீரகங்கள், கண்கள் தானமாக அளிக்கப்பட்டன.