குடிநீர் கேட்டு அரசுப் பேருந்து சிறைபிடிப்பு
By DIN | Published On : 20th February 2019 06:48 AM | Last Updated : 20th February 2019 07:28 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூரை அடுத்த பெரிய கண்ணாலப்பட்டி கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீர் கடந்த ஒரு மாதமாக முறையாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அருகே உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, பலமுறை ஊராட்சி செயலர் மற்றும் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர்- தருமபுரி பிரதான சாலையில் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்தை அவர்கள் சிறைபிடித்தனர்.
தகவலறிந்த கந்திலி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.