மின்சார ரயிலை மறித்து பெண்கள் போராட்டம்
By DIN | Published On : 20th February 2019 06:49 AM | Last Updated : 20th February 2019 06:49 AM | அ+அ அ- |

அரக்கோணத்தில் மின்சார ரயில் தினமும் காலதாமதமாகப் புறப்படுவதைக் கண்டித்து பெண் பயணிகள் செவ்வாய்க்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணத்தில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு சிறப்பு மகளிர் விரைவு மின்சார ரயில் வேளச்சேரிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த 15 நாள்களாக தினமும் 30 நிமிடம் தாமதமாக காலை 7.30 மணியளவில் புறப்படுவதால் அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அரக்கோணம் ரயில் நிலைய மேலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி வரை அந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி ரயிலின் முன் நின்று மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ரயில் நிலைய மேலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், அரக்கோணம் - திருவள்ளூர் மார்க்கத்தில் இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், காலதாமதம் தவிர்க்க முடியாததாகி விட்டது.
இனி இந்த ரயில் குறித்த நேரத்தில் இயக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து 7.40 மணியளவில் மகளிர் சிறப்பு விரைவு மின்சார ரயில் வேளச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றது.