முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
தாலிக்குத் தங்கம் திட்டப் பயனாளிகளிடம் லஞ்சம் பெறுவோர் மீது நடவடிக்கை: சமூக நல அலுவலர் எச்சரிக்கை
By DIN | Published On : 28th February 2019 05:49 AM | Last Updated : 28th February 2019 05:49 AM | அ+அ அ- |

தாலிக்குத் தங்கம் திட்டப் பயனாளிகளிடம் லஞ்சம் பெறும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டியன் டார்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி, நிலுவையிலுள்ள பல்வேறு திட்டங்களை அரசு அலுவலர்கள் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி, சமூக நலத் துறையின் தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வழங்கப்பட்டன. மொத்தம் 1,400 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
அப்போது மாவட்ட சமூலநல அலுவலர் கிறிஸ்டியன் டார்த்தி பேசுகையில், நலத் திட்ட உதவிகள் பெற பயனாளிகள் யாரும் அதிகாரிகளிடமும், இடைத்தரகர்களிடமும் லஞ்சம் அளிக்க வேண்டாம். தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும். எக்காரணம் கொண்டும் அதிகாரிகள், பயனாளிகளிடம் இருந்து பணத்தை பெற்றுவிடக் கூடாது. அவ்வாறு பணம் பெறும் அதிகாரிகள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.