அம்மூர் காப்புக் காட்டுக்கு தீ வைப்பு: அரியவகை மரங்கள் எரிந்து நாசம்
By DIN | Published On : 28th February 2019 02:29 AM | Last Updated : 28th February 2019 02:29 AM | அ+அ அ- |

அம்மூர் காப்புக் காட்டுக்கு புதன்கிழமை மர்ம நபர்கள் தீ வைத்ததில், காப்புக் காட்டில் வளர்ந்திருந்த அரிய வகை செம்மரங்கள் தீயில் கருகி நாசமாயின.
ராணிப்பேட்டையில் உள்ள ஆற்காடு வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், அம்மூர், பாணாவரம், மகிமண்டலம், வன்னிவேடு, புங்கனூர் ஆகிய காப்புக் காடுகள் உள்ளன. இக்காடுகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பசுமைக் காடுகள். மேற்கண்ட காப்புக் காடுகளில் விலையுர்ந்த அரிய வகை மரங்களான செம்மரம், ஆச்சால், கருங்காலி, வெல்வேலன் உள்ளிட்ட மரங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 2,273 ஹெக்டர் பரப்பளவு கொண்ட அம்மூர் காப்புக்காட்டில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை விலங்கினங்களில் ஒன்றான புள்ளி மான்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கண்ட காப்புக்காட்டில் வளர்ந்துள்ள மஞ்சம் புற்கள் மர்ம நபர்கள் வைத்த தீயில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே தீ பற்றி எரிந்தன. இதன் காரணமாக காப்புக்காட்டில் வளர்ந்துள்ள விலையுயர்ந்த மரங்கள் தீயில் கருகி வருகின்றன.
இந்நிலையில் புதன்கிழமை, மலையில் வளர்ந்துள்ள மஞ்சம் புற்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் காப்புக்காடு முழுவதும் தீ பரவி, அரிய வகை செடி, கொடி, மரங்கள் எரிந்து கருகின.