மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி அதிமுக: அமைச்சர் கே.சி. வீரமணி
By DIN | Published On : 28th February 2019 05:48 AM | Last Updated : 28th February 2019 05:48 AM | அ+அ அ- |

எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி அதிமுகதான் என அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
திருப்பத்தூர் அருகே உள்ள குனிச்சி வட்டார மருத்து துறையின் சார்பில் செவ்வாய்க்கிழமை மருத்துவ கட்டடங்கள் திறப்பு விழா நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். எம்.பி. வனரோஜா, திருப்பத்தூர் சுகாதாரத் துறை இணை இயக்குநர் தேவபார்த்தசாரதி, முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டார். அவர், கெஜல்நாயக்கன்ப்பட்டியில் நோயாளிகள் ஓய்வறை, சின்ன கந்திலியில் துணை சுகாதார நிலையம், காக்கங்கரையில் செவிலியர் குடியிருப்பு, நத்தத்தில் துணை சுகாதார நிலையம், குனிச்சியில் கூடுதல் இணைப்புக் கட்டடங்களான கர்ப்பகால முன் பரிசோதனைக் கட்டடம், சமுதாயக் கூடக் கட்டடம், புற நோயாளிகள் பிரிவு, தொற்றா நோய் பிரிவு, கண் பரிசோதனைப் பிரிவு ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் பேசியது: கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சட்டப் பேரவை வளாகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவமனையாக மாற்றினார்.
எப்போது மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதே அதிமுக அரசின் நோக்கமாகும். மருத்துவத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் கடந்த திமுக ஆட்சியில் 20 முதல் 22 ஆக இருந்தது. தற்போதைய அதிமுக ஆட்சியில் அது 15 முதல் 16 சதவீதம் வரை உள்ளது. இந்த இறப்பு விகிதம் குறைந்ததற்குக் காரணம் ஆங்காங்கே கர்ப்பிணிப் பெண்களுக்குகென பிரத்யேக பேறுகால முன் பரிசோதனை கட்டடங்கள் கட்டப்பட்டு, பராமரிக்கப்படுவதான் என்றார் அவர்.