தாய், மகன் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 04th January 2019 02:01 AM | Last Updated : 04th January 2019 02:01 AM | அ+அ அ- |

முன் விரோதம் காரணமாக தாய் மற்றும் மகனைத் தாக்கிய 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்த ராஜாவின் மனைவி லோகநாயகி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முத்துவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை லோகநாயகி தனது மகன் சதீஷ்குமாருடன் (21) மாரியம்மன் கோயிலுக்குச் சென்றாராம். அப்போது, அங்கிருந்த முத்துவுக்கும், லோகநாயகிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முத்து மற்றும் அவரது உறவினர்களான அண்ணாமலை, அமுதா, தீனா ஆகியோர் லோகநாயகியையும் சதீஷ்குமாரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் முத்து, அண்ணாமலை, அமுதா, தீனா ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.