பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம்: சுகாதார ஆய்வாளரிடம் விசாரணை

பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற புகாரின்பேரில் வேலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார ஆய்வாளர்


பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற புகாரின்பேரில் வேலூர் அரசு மருத்துவமனையின் சுகாதார ஆய்வாளர் அறையில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு திடீர் சோதனை நடத்தி லஞ்சமாகப் பெறப்பட்ட ரூ. 6,700 தொகையுடன் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிறக்கும், இறக்கும் குழந்தைகளுக்கு பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. இங்கிருந்து பென்னாத்தூர் பேரூராட்சி அலுவலகம் வெகுதொலைவில் உள்ளதால் பொதுமக்கள் நலன்கருதி கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பிறப்பு, இறப்புப் பதிவாளர் அலுவலகம் அரசு மருத்துவமனையிலேயே செயல்பட்டு வருகிறது. இங்கு பிறப்பு, இறப்புப் பதிவாளர் பொறுப்பை கத்தாழம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் தயாளன் (51), கூடுதலாக கவனித்து வருகிறார். 
அரசு மருத்துவமனையில் பிறக்கும், இறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ. 200 வரைவோலை பெற்று அளிக்க வேண்டும். 
ஆனால், பதிவாளரான தயாளன், குழந்தைகளின் பெற்றோரிடம் ரூ. 300 முதல் ரூ. 500 வரை பணம் வசூலித்து அவரே வங்கியில் பணம் செலுத்தி வரைவோலை பெற்று சான்றிதழ் அளித்து வந்ததாகத் தெரிகிறது. 
இதுதொடர்பாக, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு தயாளன் அலுவலகத்துக்குச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவரிடம் இருந்த லஞ்சமாகப் பெறப்பட்ட ரூ. 6,900, வரைவோலைக்காக வங்கியில் செலுத்த பெறப்பட்டிருந்த ரூ. 11,400 என மொத்தம் ரூ. 18,300 தொகை பறிமுதல் செய்யப்பட்டது. 
தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் தயாளினிடம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த திடீர் சோதனையால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com