வியத்நாம் விலங்கியல் ஆர்வலர் வாழ்க்கை குறிப்பு புத்தகம் வெளியீடு
By DIN | Published On : 05th January 2019 11:49 PM | Last Updated : 05th January 2019 11:49 PM | அ+அ அ- |

வியத்நாம் நாட்டிலுள்ள விலங்கியல் ஆர்வலரின் வாழ்க்கையை விளக்கி வேலூர் கால்நடை மருத்துவர் முரளிபய் எழுதிய ஆங்கில புத்தகம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
வேலூர் அருகே கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் முரளிபய். கால்நடை மருத்துவரான இவர், டிலோஸ் ட்ரூப்ஸ்' என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகம் எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகம் வியத்நாம் நாட்டில் அழிவின் விளிம்பிலுள்ள வன உயிரினங்களைப் பாதுகாத்து அவற்றை இனப்பெருக்கம் செய்ய வைத்து மீண்டும் வனத்திலேயே விடும் சேவையை புரிந்து வரும் விலங்கியல் ஆர்வலான டிலோ' என்பவரின் வாழ்க்கையை விளக்குவதாக அமைந்துள்ளது.
மேலும், டிலோ' எடுத்துள்ள ஏராளமான அரிய வன உயிரினங்களின் புகைப்படங்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் புத்தக வெளியீட்டு விழா வேலூர் விருதம்பட்டிலுள்ள தனியார் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், டிலோஸ் ட்ரூப்ஸ்' புத்தகத்தை பள்ளியின் முதல்வர் பிரான்ஸில்சேமியுல் வெளியிட அதை அப்பள்ளியின் நூலகரான ரீட்டா பெற்றுக்கொண்டார்.
இந்தப் புத்தகம் குறித்து செய்தியாளர்களிடம் மருத்துவர் முரளிபய் கூறியது:
சீனா, தாய்லாந்து, மியான் மார்க், லாவோ ஆகிய நாடுகளின் வணிக தளமாக விளக்கும் கோல்டன் டிரையாங்கிள் பகுதியில் வன விலங்குகளின் இறைச்சிகள், எலும்புகள், உடல் உறுப்புகள் மில்லியன் கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன.
மருத்துவம், அந்தஸ்து என பல்வேறு தேவைகளின் அடிப்படையில் நடைபெறும் இந்த விற்பனையால் பல அரிய வன உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. இந்த வணிகத்தைப் பார்த்து மனதளவில் பாதிக்கப்பட்ட டிலோ, தனது வாழ்க்கையை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களை பாதுகாப்பதில் அர்ப்பணித்துக் கொண்டார். அவர் இதுவரை 300-க்கும் மேற்பட்ட அரிய வன உயிரினங்களைப் பாதுகாத்து மீண்டும் வனப்பகுதியில் விட்டுள்ளார். அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.