உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை தமிழியக்கம் மேற்கொள்ளும்: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்
By DIN | Published On : 07th January 2019 12:40 AM | Last Updated : 07th January 2019 12:40 AM | அ+அ அ- |

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை, தமிழ் பேசுபவர்களை ஒன்றிணைந்துப் பார்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழியக்கம் மேற்கொள்ளும் என்று தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.
தமிழியக்கப் பொருளாளர் புலவர் வே.பதுமனார் எழுதிய "விழித்தால் விடியும்', "தெளித்தமிழ்ச் சொல் அகராதி' ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா, தமிழவேள் விருது பெற்ற சிவாலயம்
ஜே.மோகனுக்கு பாராட்டு விழா வேலூர் கண்ணா மஹாலில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழியக்கம், வேலூர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, குடியாத்தம் கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் வரவேற்றார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத் தலைவர் சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினர். விழாவில், தமிழியக்கத் தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் "விழித்தால் விடியும்' என்ற நூலை வெளியிட அதன் முதல் பிரதியை ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத் தலைவர் ஜெ.லட்சுமணன் பெற்றுக்கொண்டார்.
பின்னர், ஜி.விசுவநாதன் பேசியது: தமிழவேள் விருது தொடங்கப்பட்டு சுமார் 110 ஆண்டுகளில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த உமாமகேஸ்வரன், நீதிக் கட்சி தோன்ற காரணமாக இருந்த பி.டி.ராஜன், நூல் பதிப்பாளர் மெய்யப்பன் ஆகிய 3 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிவாலயம் மோகனுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கணினி பொறியியலில் முதுகலை பட்டம் பெற்ற சிவாலயம் மோகன், தமிழ் மீதுள்ள பற்றால் தமிழுக்கு சேவை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 19-இல் தொடங்கப்பட்ட தமிழியக்கத்தில் இவர் பொருளுதவியுடன் சேவையும் புரிந்து வருகிறார்.
உலகிலுள்ள தமிழர்களை, தமிழ் பேசுபவர்களை ஒன்றாக இணைத்து பார்க்க வேண்டும். அதற்கான பணிகளை தமிழியக்கம் மேற்கொள்ளும் என்றார் அவர்.