பிளாஸ்டிக் தடையால் மந்தாரை இலைகளுக்கு வரவேற்பு

பிளாஸ்டிக் தடை காரணமாக மந்தாரை இலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.


பிளாஸ்டிக் தடை காரணமாக மந்தாரை இலைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. அதனால் பிளாஸ்டிக்கிற்கான மாற்றுப் பொருள்களுக்கு தற்போது வரவேற்பு கிடைத்துள்ளது. அவற்றில் மந்தாரை இலையும் ஒன்றாகும். 
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டப் பேரவைத் தொகுதி மாதனூர் ஒன்றியத்துக்குள்பட்ட பாலாற்றுப் படுகையில் அமைந்துள்ளது சின்னசேரி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 450 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தைச் சுற்றி தென்னந்தோப்பு மற்றும் கரும்புத் தோட்டங்கள் உள்ளன. இப்பகுதி ஆண்கள் விவசாயம் மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். பெண்கள் நூறு நாள் வேலைக்கும், 300-க்கும் மேற்பட்ட குடும்பப் பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்கின்றனர். வீட்டு வேலை முடிந்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பயனுள்ளதாகவும், வருவாய்க்காகவும் மந்தாரை இலைகள் தைப்பதைத் தொழிலாக செய்து வருகின்றனர். 
இத்தொழில் சுமார் 40 ஆண்டுகள் பழைமையானது. ஆந்திரம், மஹாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள காடுகளில் இருந்து மந்தாரை இலைகளை மொத்தமாக வியாபாரிகள் வேலூருக்கு கொண்டு வருகின்றனர். இந்த கிராமத்தினர் அவற்றை வாங்கி வந்து இங்குள்ள மகளிர் குழுக்களுக்கும், வீடுகளில் உள்ள பெண்களுக்கும் ஒரு கிலோ ரூ.80 என்ற விலைக்கு விற்கின்றனர். ஒரு கிலோ மந்தாரை இலையைக் கொண்டு தைக்கப்பட்ட 100 இலைகள் அடங்கிய கட்டைத் தயார் செய்கின்றனர். 100 இலைகளின் விலை ரூ.100 ஆகும்.வியாபாரிகள் வாரத்தில் மூன்று நாள்கள் இந்த கிராமத்துக்கு நேரடியாக வந்து இலைக் கட்டுகளை பணம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். தற்போது பிளாஸ்டிக் தடை காரணமாக கட்டின் விலை ரூ.130-ஆக அதிகரித்துள்ளது. தற்போது இலைகள் தைக்கப்பட்ட அன்றே வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அந்த அளவுக்கு மந்தாரை இலைகளின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 1 முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்ததால் உணவகங்களில் மந்தாரை இலைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் வீட்டு வேலைகளை முடித்த பின்னர் சுமார் 4 கட்டு இலைகளைத் தைத்து முடிக்கின்றனர். இதில் கணிசமான லாபம் கிடைக்கிறது. 
மந்தாரை இலைகளை மானிய விலையில் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். பிளாஸ்டிக் தடை காரணமாக மந்தாரை இலைகளுக்கு கிடைத்த வரவேற்பால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com