புதிய காவல் நிலையக் கட்டுமானப் பணி தாமதம்: பொதுமக்கள் வேதனை

குரிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி பல மாதங்களாக தொடங்காமல் தாமதம் செய்துவருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். 

குரிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி பல மாதங்களாக தொடங்காமல் தாமதம் செய்துவருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். 
திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையம், கிராமியக் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கந்திலி, குரிசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி காவல் நிலையங்கள் என 7 காவல் நிலையங்கள் உள்ளன.
திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்திலேயே  மிக சிறிய அளவிலான கட்டடத்தில் (900 சதுரடி)யில் குரிசிலாப்பட்டு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்தக் காவல் நிலைய சுவர்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரைகள் சிதிலமடைந்துள்ளன. வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க இட வசதி இல்லை. பணியில் உள்ள காவலர்களும், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களும் அமர போதுமான இடவசதி இல்லை. இந்தக் காவல் நிலையத்துக்கென 5,400 சதுர அடி அளவு இடம் உள்ளது. 
காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கடந்த 2015-ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், அப்பணிகள் 4 ஆண்டுகளாகியும் நிறைவடையவில்லை. 
கந்திலி வட்ட ஆய்வாளர் குரிசிலாப்பட்டிக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். 2 உதவிக் காவல் ஆய்வாளர் உள்ளனர். 2 தலைமைக் காவலர், 4 முதல்நிலைக் காவலர்கள், 22 இரண்டாம்நிலைக் காவலர்கள் என மொத்தம் 30 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் உதவி ஆய்வாளர்கள் உள்பட 14 காவலர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். இந்தக் காவல் நிலையக் கட்டுப்பாட்டின் கீழ் 8 பிரதான கிராமங்கள், 39 குக்கிராமங்கள் என மொத்தம் 47 கிராமங்கள் உள்ளன. 
காவல் நிலையக் கட்டுமானப் பணி தொடங்குவதற்காக தற்காலிமாக அங்குள்ள சமுதாயக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு மாற்றப்பட்டு 6 மாதங்களாகியும் பணி தொடங்கப்படவில்லை என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். 
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, விரைவில் கட்டடப் பணி தொடங்கப்படும் என தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com