கிராமங்களில் எருதுவிடும் திருவிழா: 25 பேர் படுகாயம்

வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை, பெரியகுறும்பத்தெரு கிராமங்களில் எருது விடும்

வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை, பெரியகுறும்பத்தெரு கிராமங்களில் எருது விடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
பெரியகுறும்பத்தெரு பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு ஊர்க் கவுண்டர் சிவா தலைமை வகித்தார். 
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயசக்தி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பி.மணி, ஊர் நாட்டார் எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வாணியம்பாடி, மிட்டூர், ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நிம்மியம்பட்டு, லத்தேரி, அம்பலூர், ராமநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின. 
அதிவேகமாக ஓடி,   நிர்ணயிக்கப்பட்ட இலக்கைக் கடந்த ஜோலார்பேட்டையைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.55,555-ம், இரண்டாவதாக வந்த வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.44,444-ம், மூன்றாவது பரிசாக நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.33,333-ம் வழங்கப்பட்டன. 
தொடர்ந்து அடுத்தடுத்து அதிவேகமாக ஓடிய 46 காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின்போது 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதேபோல், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவுக்கு ஊர்க் கவுண்டர் கோதண்டபாணி தலைமை வகித்தார். 
முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வெ.கிரி வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவைர் பலராமன், ஆசிரியர் வெங்கடாசலம், கூட்டுறவு சங்கத் தலைவர் அச்சுதன் முன்னிலை வகித்தனர். போட்டியை வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயப்பிரகாஷ் தொடங்கி வைத்தார். போட்டியில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. 
அதிவேகமாக ஓடி இலக்கைக் கடந்த ஏலகிரிமலையைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.60 ஆயிரமும், இரண்டாவது பரிசாக மிட்டூர் பகுதியைச் சேர்ந்த காளை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த காளையின் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்து அதிவேகமாக ஓடிய 27 காளைகளின் உரிமையாளர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். விழா நடைபெற்ற இடத்தில் வாணியம்பாடி டிஎஸ்பி முரளி தலைமையில்  100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவில் காளைகள் முட்டியதிலும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதிலும் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com