மணல் லாரி மோதி இளைஞர் சாவு: அரசு வேலை கேட்டு மனைவி மனு

வாலாஜாபேட்டை அருகே மணல் லாரி வீட்டு சுற்றுச்சுவரில் மோதி இளைஞர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மனைவி அரசு வேலை

வாலாஜாபேட்டை அருகே மணல் லாரி வீட்டு சுற்றுச்சுவரில் மோதி இளைஞர் உயிரிழந்ததை அடுத்து, அவரது மனைவி அரசு வேலை வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தார்.
வாலாஜாபேட்டையை அடுத்த எடகுப்பம் வள்ளுவம்பாக்கம் சாலையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (37). தொழிலாளியான இவர், புதன்கிழமை இரவு வீட்டின் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு அவ்வழியாக சென்ற மணல் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராதாகிருஷ்ணனுடைய வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில், சுவர் இடிந்து ராதாகிருஷ்ணன் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்தார். வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதையடுத்து, ராதாகிருஷ்ணனின் உயிரிழப்புக் காரணமான மணல் லாரியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் தென்கடப்பந்தாங்கல் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இந்நிலையில், இறந்த ராதாகிருஷ்ணனின் மனைவி யமுனாநதி தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தார். பின்னர், அவர் அதிகாரிகளிடம் அளித்த மனுவில், எனக்கு 2 பெண்கள் குழந்தைகளும், 9 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். எனது கணவர் ராதாகிருஷ்ணன் லாரியால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததை அடுத்து எங்களது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, எங்கள் ஏழ்மை நிலைக் கருதி கருணை அடிப்படையில் அரசு நிதியுதவியும், எனக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். மேலும், எனது கணவர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று மனுவில் தெரிவித்தார். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே சாலை மறியலில் ஈடுபட்ட 150 பேர் மீது வாலாஜாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com