தன்வந்திரி பீடத்தில் வள்ளலார் ஜோதி தரிசனம்
By DIN | Published On : 22nd January 2019 06:48 AM | Last Updated : 22nd January 2019 06:48 AM | அ+அ அ- |

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தைப்பூச விழா மற்றும் வள்ளலார் ஜோதி தரிசனத்தையொட்டி திங்கள்கிழமை காலை 10 மணியளவில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றன.
தைப்பூச விழாவையொட்டி தன்வந்திரி பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஹோமமும், பூஜைகளும் நடத்தப்பட்டன. இதனிடையே, வடலூரில் சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்த ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் தைப்பூச நாளில் வருகிறது. வள்ளலார் 1876-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். அவருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனிச் சந்நிதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உலக மக்களின் நலன் கருதி திங்கள்கிழமை வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஹோமும் கஞ்சி வழங்கும் விழாவும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் சார்பில், மகா மந்திரம் ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, திருவடிப் புகழ்ச்சி, திருஅகவல் பாராயணம் நடைபெற்றது. சன்மார்க்க கொடியேற்றப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.