நாளை கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 24th January 2019 11:46 PM | Last Updated : 24th January 2019 11:46 PM | அ+அ அ- |

குடியரசு தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (ஜன.26) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில், கழிப்பறை கட்டி பயன்படுத்தாத நபர்களின் பெயர்களை வாசிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தையொட்டி, சனிக்கிழமை அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், 2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம் குறித்து விவாதம், 2019-20-ஆம் நிதியாண்டில் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ள ஊராட்சி வளர்ச்சிப் பணிகள் மீதான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுதல், குடிநீர் சிக்கனம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதம், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்ட ஊராட்சிகளில் கழிப்பறை கட்டி பயன்படுத்தாத நபர்களின் பெயர்கள் வாசிக்கப்படும்.
இந்தக் கிராம சபைக் கூட்டங்களில் வட்டாட்சியர்கள் பார்வையாளர்களாக பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதைக் கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.