தனியார் பேருந்து விபத்தில் பெண் சாவு; 50 பேர் காயம்
By DIN | Published On : 29th January 2019 11:44 PM | Last Updated : 29th January 2019 11:44 PM | அ+அ அ- |

ஆம்பூர் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒரு பெண் இறந்தார். 50 பேர் காயமடைந்தனர்.
பேர்ணாம்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள மசிகம், கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆம்பூருக்கு காலணி தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு 60}க்கும் மேற்பட்டார் பேர்ணாம்பட்டில் இருந்து ஆம்பூருக்கு அதிகாலை 5.10 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றில் பயணம் செய்தனர். பேருந்தை சிவனேசன் (52) ஓட்டிச் சென்றார்.
மாச்சம்பட்டு கிராமம் அருகே சென்றபோது சாலையில் குறுக்கே திடீரென ஒரு டிராக்டர் வந்துள்ளது. இதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தார். ஆனாலும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிராக்டர் மீது மோதிவிட்டு, அருகே இருந்த சாலையோர புளியமரத்தின் மீது மோதி நின்றது. அதில் ஓட்டுநர் சிவனேசன் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 50}க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவலின் பேரில் ஆம்பூர் பகுதிகளில் இருந்து 10}க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் மசிகம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (52), ராஜேந்திரன் (52), லோகேஷ் (23), தமிழரசு (28), பன்னீர் (59), அஜித்குமார் (22), ராஜேஸ்வரி (45) உள்ளிட்ட 50 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் மசிகம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தம்மாள் வேலூர் செல்லும் வழியிலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து உமர்ஆபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தகவலறிந்த திருப்பத்தூர் சார்}ஆட்சியர் பிரியங்கா, ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா ஆகியோர் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.