திருப்பத்தூர் அருகே கி.பி.13-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு
By DIN | Published On : 01st July 2019 01:44 AM | Last Updated : 01st July 2019 01:44 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் அருகே கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, முனைவர் சு.சிவசந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய 4 நடுகற்களும் ஒரு சதிக்கல்லும் ஒரே இடத்தில் வழிபாட்டில் உள்ளதைக் கண்டறிந்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியது:
திருப்பத்தூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள தாதனவலசு என்ற இடத்தில் அமைந்துள்ள வேடியப்பன் கோவில் வளாகத்தில் நான்கு நடுகற்கள் காணப்படுகின்றன. திருப்பத்தூரில் இருந்து ஜவ்வாதுமலைக்குச் செல்லும் குறுக்குப் பாதையான வழித்தடத்தில் சாலையோரம் வேடியப்பன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு பழமையான எட்டிமரத்தின் அடியில் வலக்கரங்களில் அம்பும் இடக்கரங்களில் வில்லும் ஏந்திய நிலையில் மூன்று வீரர்கள் காணப்படுகின்றனர். இவ்வீரர்கள் மூவரும் அலங்கரிக்கப்பட்ட நேரான கொண்டையை முடிந்துள்ளனர். கழுத்தில் ஆறு அடுக்குகளைக் கொண்ட கழுத்தணியை அணிந்துள்ளனர். முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டையும், இடைக் கச்சையுடன் குறுவாளும், காதுகளில் குண்டலமும், புயங்களில் பூண்களும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளனர்.
இத்தோற்றம் இவர்களை இங்கு நடைபெற்ற போரில் தலைமையேற்றவர்கள் என்பதை உணர்த்துகின்றன. இவர்களுக்கு நேரெதிரே வலக்கரத்தில் கட்டாரியும் இடக்கரத்தில் குறு வாளும் ஏந்திய வீரன் உருவமும் உள்ளது. சற்று தொலைவில் கையில் மதுக்குடத்துடன் ஒரு பெண் சிற்பமும் இடம்பெற்றுள்ளது. இவை இவ்வட்டாரத்தில் நடைபெற்ற போரில் மடிந்த வீரர்களுக்கான நடுகற்களாகும்.
கையில் மதுக்குடத்துடன் வீற்றிருக்கும் பெண் வீரர்களில் எவரேனும் ஒருவரது மனைவியாக இருக்கக் கூடும். வீரனோடு அப்பெண்ணும் இறந்த செய்தியை இச்சதிக்கல் அறிவிக்கிறது. இங்கு அமைந்துள்ள நான்கு நடுகற்களில் மூன்று அளவில் பெரியதாகவும் வரிசையாக அருகருகேயும் நிலைபெற்றுள்ளன. இந்த மூன்று கற்களுக்கு எதிராக சிறிய அளவில் ஒரு நடுகல் நடப்பட்டுள்ளது. பொதுவாக கற்களின் அளவானது வீரர்களுக்கான முக்கியத்துவத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
வரலாற்றின் சாட்சிகளாக நிற்கும் இக்கற்கள் ஒரு காலத்தில் மண்ணில் புதையுண்டு இருந்தவை. அண்மையில் நடைபெற்ற கோயில் புதுப்பிக்கும் பணியின்போது இவற்றைத் தோண்டியெடுத்து சிற்பிகளின் உதவியோடு நவீன கருவிகளால் மெருகேற்றி இங்கு வைத்துள்ளனர். இந்நடுகற்கள் விஜயநகரப் பேரரசின் தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கக்கூடும். அவற்றை வேடியப்பன் கல் என்றும், அவை அமைந்துள்ள கோயில்களை வேடியப்பன் கோயில் என்றும் அழைப்பது வட தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள நடுகற்களை மெருகேற்றியதால் அவை தொன்மைத் தோற்றத்தை இழந்துள்ளன. தொல்லியல் துறையினர் இதுபோன்ற வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார் அவர்.