குடியாத்தம் வட்டத்தில் உள்ள 3 ஏரிகளை ரூ.1 கோடியில் புனரமைக்க பூமிபூஜை
By DIN | Published On : 05th July 2019 02:20 AM | Last Updated : 05th July 2019 02:20 AM | அ+அ அ- |

குடியாத்தம் வட்டத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள 3 ஏரிகளை ரூ.1 கோடியில் புனரமைக்க வியாழக்கிழமை பூமிபூஜை போடப்பட்டது.
பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குடியாத்தம் வட்டத்தில் உள்ள வேப்பூர் ஏரி ரூ.46.30 லட்சத்திலும், பசுமாத்தூர் பெரிய ஏரி ரூ.38 லட்சத்திலும், பசுமாத்தூர் சித்தேரி ரூ.15.70 லட்சத்திலும் புனரமைக்கப்பட உள்ளன.
இந்நிதியில் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல், ஏரிக்கரைகளை பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் நீர்வள ஆதாரத்துறை உதவிப் பொறியாளர் ரவி, தனி ஆய்வாளர்கள் சிவாஜி, சிவக்குமார், பாசன ஆயக்கட்டுதாரர்கள் செல்வராஜ், ராமு, ஆறுமுகம், சுப்பிரமணி, உமாபதி, ரவி, செழில்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.