மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடி அமல்: ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்
By DIN | Published On : 05th July 2019 02:18 AM | Last Updated : 05th July 2019 02:18 AM | அ+அ அ- |

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்பட இருந்த நிலையில், பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இத்தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானது முதலே வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல்
நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, அறிவிப்பாணை முறையாக அரசு இதழில் வெளியிடப்படும் நாள் ஜூலை 11, வேட்பு மனு தாக்கல் தொடக்கம் ஜூலை 11, வேட்புமனு தாக்கல் இறுதிநாள் ஜூலை 18, வேட்பு மனு பரிசீலனை ஜூலை 19, வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் ஜூலை 22, தேர்தல் நாள் ஆகஸ்ட் 5, வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 9, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுறும் நாள் ஆகஸ்ட் 11.
வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் ஆகிய பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூர் மக்களவைத் தொகுதியில், கடந்த மார்ச் 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மொத்தம் 14,26,991 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6,98,644 பேர், பெண்கள் 7,28,245 பேர், இதர வாக்காளர்கள் 102 பேர் அடங்குவர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் 1,153 வாக்குச்சாவடி மையங்கள் 690 இடங்களில் அமைக்கப்படும். 68 இடங்களில் உள்ள 133 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறிப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலுக்காக 3,200 மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 133 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர். 1,880 மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் (விவி பேட்) பயன்படுத்தப்படும்.
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் 18 பறக்கும் படை குழுக்களும், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். தேர்தல் கட்டுப்பாட்டு அறை வெள்ளிக்கிழமை முதல் செயல்படும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வேலூர் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை முதலே அமுலுக்கு வருகின்றன. இதனால், இந்த விதிமுறைகள் முடிவுக்கு வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை ஆட்சியர் தலைமையிலான மக்கள் குறைதீர் கூட்டம், மனுநீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், அரசு விழாக்கள் நடைபெறாது.
அதேசமயம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நாள்களில் பொதுமக்கள் தங்களின் அடிப்படை தேவையான பிரச்னைகளுக்கு மட்டும் ஆட்சியரின் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண்ணான 94980 35000-இல் புகார்களைத் தெரிவிக்கலாம்.