மின்சாரம் பாய்ந்து மாணவர் காயம்: பள்ளி முற்றுகை
By DIN | Published On : 12th July 2019 09:27 AM | Last Updated : 12th July 2019 09:27 AM | அ+அ அ- |

ஆம்பூரில் இயங்கிவரும் நகராட்சிப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்ததில் மாணவர் புதன்கிழமை காயமடைந்தார்.
ஆம்பூர் அழகாபுரி பகுதியில் நகராட்சி துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை இந்திரா நகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு மாணவர் லோகேஸ்வரன் பள்ளி வளாகத்தில் விளையாடியுள்ளார். அப்போது, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றுக்குச் செல்லும் மின் இணைப்பின் வயர் மூலம் மாணவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைப் பார்த்த பள்ளித் தலைமையாசிரியர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு, வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளித்து படுக்க வைத்துள்ளனர். மேலும், அந்த மாணவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த மற்றொரு மாணவரின் பெற்றோர் இதைக் கண்டு உடன் அந்த மாணவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தாராம்.
இதைத் தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை: இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வாணியம்பாடி மாவட்டக் கல்வி அலுவலர் லதா செல்லிடப்பேசி மூலம் விசாரணை நடத்தினார். மேலும், நகராட்சிப் பணியாளர்கள் மின்இனைப்புகளைச் சீரமைத்தனர்.