நீராதாரப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு: பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

பாலாறு நீராதாரப் பிரச்னையை மையப்படுத்தி கடந்த முறை வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட

பாலாறு நீராதாரப் பிரச்னையை மையப்படுத்தி கடந்த முறை வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பாலாறு பாதுகாப்பு இயக்கம், இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் பாலாறு பிரச்னைக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஜீவ நதிகளில் ஒன்றான பாலாறு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாசனப் பகுதிகளின் நீராதாரமாகவும், இந்த மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. எனினும், ஆந்திர அரசு கட்டி வரும் தடுப்பணைகள், தொடரும் மணல் கொள்ளை போன்ற காரணங்களால் தமிழகத்தில் பாலாறு வறண்டு பாழடைந்து வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னை குறித்து, ஒவ்வொரு தேர்தல் நேரத்தின் போது பேசப்படுவதும், திட்டங்கள் அறிவிக்கப்படுவதும், பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழக்கமான ஒன்று. 
அந்த வகையில், மக்களவைத் தேர்தல் மூலமே பாலாறு நீராதாரப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். மேலும், பாலாறு பிரச்னைக்குத் தீர்வு காண உறுதி அளிக்கும் வேட்பாளருக்கே ஆதரவு அளிக்கப்போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாமக ஆகிய பிரதான கட்சிகள் வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கைகளில், பாலாறு பிரச்னை குறித்து பேசப்படாதது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையடுத்து பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், வேலூர் மக்களவைத் தொகுதியில் பாலாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொது வேட்பாளராக வெங்கடேசன், ஆம்பூர் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுசீலா ஆகியோர் போட்டியிட்டனர். 
இதனிடையே, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்முறை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் பாலாறு நீராதாரப் பிரச்னைக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பாலாறு பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த இயக்கத்தின் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் கூறியது:
தமிழகத்தில் உள்ள நதிநீர் பிரச்னைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது பாலாறு விவகாரம். ஆனால், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக ஆகியவை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் எதிலும் முல்லைப் பெரியாறு, காவிரி, மேக்கேதாட்டு குறித்து கூறப்பட்ட நிலையில் பாலாறு பிரச்னைக்கான தீர்வு குறித்து பேசப்படாததால் பாலாறு விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கும், அவை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதியில் பொதுவேட்பாளரை நிறுத்தினோம்.
ஆனால், இம்முறை பொது வேட்பாளரை நிறுத்தாமல் பாலாறு பிரச்னைக்கு தீர்வு காண உறுதியளிக்கும் பிரதான கட்சிக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளோம். தேர்தலில் வெற்றி என்பது பிரதான கட்சி வேட்பாளருக்கே கிடைக்கக் கூடியதாக இருந்து வருகிறது. 
அதில் எந்த வேட்பாளரால் எங்கள் குரலை மக்களவையில் ஒலிக்கச் செய்ய முடியும் என்பதை அறிந்து அவருக்கு ஆதரவளித்து பிரசாரமும் செய்ய உள்ளோம். பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தாலே போதும் என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com