இளம்பெண் தற்கொலை: கணவர் உள்பட இருவர் மீது புகார்
By DIN | Published On : 19th July 2019 12:23 AM | Last Updated : 19th July 2019 12:23 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி கணவர், மாமியார் ஆகியோர் மீது பெண்ணின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
கடலூரை அடுத்த வேப்பூர் எடைசித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(40). அவருடைய மகள் திவ்யா(19) திருச்செங்கோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரனின் மகன் சக்தியும் காதலித்தனர்.
இந்த விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதற்கு திவ்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு கடந்த முன்பு ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
எனினும், இந்த தம்பதியர் இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திவ்யா கடந்த 14-ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது தொடர்பாக திவ்யாவின் தந்தை முருகானந்தம் ஜோலார்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். அதில், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது கணவர் சக்தி, மாமியார் மஞ்சுளா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திவ்யாவுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆகியிருப்பதால் சட்ட விதிகளின்படி அது குறித்து சார்-ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.