மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்கு ரூ. 12.75 கோடி கடன்
By DIN | Published On : 19th July 2019 12:25 AM | Last Updated : 19th July 2019 12:25 AM | அ+அ அ- |

மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்கு ரூ. 12 கோடியே 75 லட்சம் மதிப்பிலான கடன் தொகையை பாரத ஸ்டேட் வங்கிகள் வியாழக்கிழமை வழங்கியது.
ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், விளாப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், பொதுமக்களுக்கு கடன் வழங்கும் விழா வாலாஜாபேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்டாரத் தலைமையகப் பொது மேலாளர் ஷெர்லி தாமஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 300 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சிறு கடன்கள், விவசாயிகளுக்கு டிராக்டர், பயிர் கடன், கல்விக் கடன், முத்ரா கடன், வீட்டுக் கடன் என ரூ. 12 கோடியே 75 லட்சம் மதிப்பில் கடன் தொகை வழங்கிப் பேசியது:
தனிநபர் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள், தொழில் துறையினர் என அனைத்துத் தரப்பினருக்கும் அதிகப்படியான கடன்களை வழங்க பாரத ஸ்டேட் வங்கி, மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து அதிகப்படியான வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் கடன்களை அளித்து வருகிறது.
தாங்கள் பெறும் கடன் தொகையை முறையாக திருப்பிச் செலுத்தும்போது மீண்டும் அதிகப்படியான கடன்களை வழங்க வங்கிகள் தயாராக உள்ளன என்றார்.
மண்டலப் பொது மேலாளர்கள் ஜோனா ராகவா, பெஞ்சமின் செரியன், வேலூர் மண்டல மேலாளர் சேது முருகதுரை, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம் உள்ளிட்ட கிளை மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.