Enable Javscript for better performance
வேலூர் மக்களவைத் தேர்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேர் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    வேலூர் மக்களவைத் தேர்தல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 பேர் கைது

    By DIN  |   Published On : 23rd July 2019 07:07 AM  |   Last Updated : 23rd July 2019 07:07 AM  |  அ+அ அ-  |  

    தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் முன்னாள் குற்றவாளிகள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட 247 பேருக்கு பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வேலூரில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
    வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி நடத்தை விதிகளை அமல்படுத்தவும், பாதுகாப்பை உறுதிசெய்யவும் மாவட்ட காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, ஏற்கெனவே மாவட்டம் முழுவதும் உரிமம் பெற்று தனியார் வைத்துள்ள 1,183 துப்பாக்கிகள் அந்தந்த காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
    இதன்தொடர்ச்சியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் முன்னாள் குற்றவாளிகள் 247 பேருக்கு பிடிஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் முன்னாள் குற்றவாளிகள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மற்றவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    இதனிடையே, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட மாவட்டக் காவல்துறை சார்பில் 20 கம்பெனி துணைராணுவம் கோரப்பட்டுள்ளது. அதில், இதுவரை 4 கம்பெனிகளைச் சேர்ந்த 240 துணை ராணுவ வீரர்கள் (மத்திய தொழிலக பாதுகாப்புப் படை) வேலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் நோக்கில் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர். 
    இதுதவிர, மாவட்டம் முழுவதும் உள்ள 13 சோதனைச் சாவடிகளிலும், 3 சுங்கச்சாவடிகளிலும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
    மேலும், வேலூர் மாவட்டத்தையொட்டி அமைந்துள்ள தமிழக - ஆந்திர வனப்பகுதியில் கள்ளச்சாராயத்தை தடுக்க ஆந்திர மாநில கலால் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தலில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினருடன் இணைந்து மாவட்ட போலீஸார் வாகனச் சோதனை உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர்.

    குடியாத்தத்தில் கொடி அணிவகுப்பு
    வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, துணை ராணுவப் படையினருடன் உள்ளூர் போலீஸார் இணைந்து குடியாத்தம் நகரில் திங்கள்கிழமை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
    வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. நெல்லூர்பேட்டை காந்தி சிலை அருகே தொடங்கிய அணிவகுப்பு நேதாஜி சவுக், சந்தப்பேட்டை பஜார், தாழையாத்தம், பஜார், சுண்ணாம்புப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காட்பாடி சாலை வழியாகச் சென்று நான்கு முனை கூட்டுச் சாலை அருகே நிறைவடைந்தது.
    இதில் குடியாத்தம் டிஎஸ்பி என்.சரவணன், நகர காவல் ஆய்வாளர் இருதயராஜ், கிராமிய காவல் ஆய்வாளர் கவிதா, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கே.வி. குப்பம், பரதராமி, மேல்பட்டி காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் கலந்து கொண்டனர்.


    "பிரசாரத்தில் தனிநபர் பற்றி விமர்சனம் செய்தால் கடும் நடவடிக்கை'
    தேர்தல் பிரசாரத்தில் தனிநபர் குறித்து விமர்சனம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து அரசியல் கட்சியினருடன் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நகரில் உள்ள காவலர் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் பெருமாள், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    கூட்டத்தில், துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பேசியது:
    எந்தவொரு அரசியல் கட்சி வேட்பாளர்களும் ஜாதி, மதம், தனிநபர்கள் குறித்து விமர்சனம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
     தேர்தல் பிரசாரம் செய்வதற்கு வேட்பாளர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், மிரட்டுதல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்தல், சின்னங்களைக் குறிக்கும் விதமாக சீட்டில் எழுதித் தருதல் ஆகியவை குற்றங்களாகக் கருதப்படும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிரசாரம் இருக்கக் கூடாது. தேர்தல் பிரசார ஒலிபெருக்கியில் கூடுதல் வசதிகளைச் சேர்க்க வேண்டும் என்றால் அனுமதி பெற வேண்டும். 
    வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்களின் ஒப்புகை பெற்ற முகவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கிய நுழைவுச்சீட்டு இல்லாமல் வாக்குச்சாவடிக்குள் நுழையக் கூடாது. பொது இடங்களில் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டக் கூடாது. விளம்பரங்கள் செய்யக் கூடாது. இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது. வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் பூத் அமைக்க அனுமதியில்லை என்றார்.
    கூட்டத்தில், அரசியல் கட்சிகளிள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp