திடக்கழிவு மேலாண்மை திட்டம்: வேலூரில் அந்தமான் மேயர் ஆய்வு
By DIN | Published On : 24th July 2019 06:56 AM | Last Updated : 24th July 2019 06:56 AM | அ+அ அ- |

வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றம் பணிகளை அந்தமான் யூனியன் பிரதேச மாநகராட்சி மேயர் அனுசுயாதேவி தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகளாகவும், மக்காத குப்பைகளாகவும் தரம் பிரித்து அதில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை சேகரித்து சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட மாற்று பயன்பாடுகளுக்கு அனுப்பவும் மாநகராட்சி முழுவதும் 43 இடங்களில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
முன்மாதிரி திட்டமாகச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை பல்வேறு மாநில அதிகாரிகளும் ஆய்வு செய்து, அதை தங்கள் உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, அந்தமான் யூனியன் பிரதேச மாநகராட்சி மேயர் அனுசுயாதேவி தலைமையில் பொறியாளர் கருப்பையா, திட்ட அலுவலர் சுஜித்பாலா, மாமன்ற உறுப்பினர்கள் கிரிகோரி, சோமேஸ்வரராவ் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் வேலூருக்கு செவ்வாய்க்கிழமை வருகை புரிந்தனர்.
அவர்கள் மாநகராட்சி முதலாவது மண்டலம் காந்தி நகரில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை ஆய்வு செய்தனர். அப்போது, குப்பைகளை சேகரித்தல், உரம் தயாரித்தல் பகுதிகளை பார்வையிட்டு விளக்கம் கேட்டறிந்தனர். அதற்கான விளக்கங்களை உதவி ஆணையர் மதிவாணன் அளித்தார்.
இதுகுறித்து அந்தமான் மேயர் அனுசுயாதேவி கூறியது:
பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் முன்மாதிரி திட்டங்களை ஆய்வு செய்து அதை அந்தமான் மாநகராட்சிப் பகுதியில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஒடிஸா மாநிலம் புவனேஷ்வர் மாநகராட்சியில் செயல்படும் பொலிவுறு நகரம் திட்டப்பணிகளை பார்வையிட்டபோது வேலூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தனர். இதையடுத்து வேலூரில் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளை ஆய்வு செய்துள்ளோம். இங்கு செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் புதிய திட்டமாக தோன்றுகிறது. இதை அந்தமான் மாநகராட்சியிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நகர்நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.