Enable Javscript for better performance
குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் நள்ளிரவில் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் நள்ளிரவில் சாலை மறியல்

    By DIN  |   Published on : 25th July 2019 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காணக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தாண்டகுப்பம் ஊராட்சி, அரசமரத்து வட்டம், ராஜ வீதி பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படவில்லையாம். இந்நிலையில், அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சிஅலுவலரிடம் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு கோரி மனு அளித்தனர். இதையடுத்து, அதே பகுதியில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அருகே தற்காலிகமாக ஒரே இடத்தில் 10 பொதுக் குழாய்களை அமைத்து, குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில், சில நாள்களுக்குள்ளாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அருகே நிலத்தின் உரிமையாளர் ஒருவர் முள்வேளி அமைத்ததால், தண்ணீர் எடுத்துச் செல்ல வழி இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு தெருக் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி செயலரிடம் கோரிக்கை விடுத்தனர். 
    ஆனால் ஊராட்சி செயலர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த 4 நாள்களாக ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதில் அதிருப்தியடைந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், செவ்வாய்க்கிழமை இரவு காலிக் குடங்களுடன் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கேத்தாண்டப்பட்டி, ஜீவா நகர் பெட்ரோல் பங்க் எதிரே மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தலிங்கம், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி ஆகியோர்  மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai