Enable Javscript for better performance
சென்னைக்கு குடிநீர்: 3 மணி நேரத்துக்குள் வேகன்களில் தண்ணீர் நிரப்பத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னைக்கு குடிநீர்: 3 மணி நேரத்துக்குள் வேகன்களில் தண்ணீர் நிரப்பத் திட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rail-water

    பார்சம்பேட்டை ரயில்வே யார்டில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் நிர்மல் ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள்.


    ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லும் குடிநீரை 3 மணி நேரத்துக்குள் வேகன்களில் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய  மேலாண்மை இணை இயக்குநர் நிர்மல் ராஜ் தெரிவித்தார்.
    ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு நாள்தோறும் ஒரு கோடி லிட்டர் காவிரிக் கூட்டுக் குடிநீர் கொண்டு செல்ல தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ரயில்களில்  நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் 100 வேகன்களில் அனுப்பப்பட்டு வருகிறது.
    இப்பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் நிர்மல் ராஜ், துறை அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
    இதுகுறித்து அவர் கூறியது:  செவ்வாய்க்கிழமை முதல் 2 ரயில்கள் மூலம் 100 வேகன்களில் 50 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. 50 வேகன்களில் குடிநீர் நிரப்புவதற்கு மூன்றரை மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தைக் குறைத்து 3 மணி நேரத்துக்குள் தண்ணீர் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட மேட்டுச்சக்கரகுப்பத்தில் உள்ள 5.05 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து ரயில் வேகன்களுக்கு குடிநீர் நிரப்பும் இடம் வரை 3.5. கி.மீ. தொலைவுக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 11 வளைவுகள் உள்ளதால் நீரின் வேகம் குறைந்து வேகன்களில் நிரப்பும் நேரம் மூன்றரை மணி நேரம் ஆகிவிடுகிறது.
     எனவே, விரைவாக குடிநீர் நிரப்புவதற்காக 11 வளைவுகள் கொண்ட குழாயை 6 வளைவுகளாக குறைத்தால் குடிநீர் நிரப்பும் நேரம் குறைந்துவிடும். 
    இதற்கான வழிமுறைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் அழகர்சாமி, நிர்வாகப் பொறியாளர்கள் சுப்பிரமணியம், ராஜீவ், கண்காணிப்புப் பொறியாளர் சுந்தரம், உதவி நிர்வாகப் பொறியாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai