Enable Javscript for better performance
பாலாற்றில் தடுப்பணை: ஆந்திரத்துடன் சுமுகப் பேச்சு நடத்தித் தீர்வு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்- Dinamani

சுடச்சுட

    

    பாலாற்றில் தடுப்பணை: ஆந்திரத்துடன் சுமுகப் பேச்சு நடத்தித் தீர்வு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

    By DIN  |   Published on : 25th July 2019 07:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளின் உயரத்தை ஆந்திர அரசு அதிகரித்து வரும் விவகாரத்தில் அம்மாநில அரசுடன் சுமுகப் பேச்சு நடத்தித் தீர்வு காணப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைன் தெரிவித்தார்.
    வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அவர் வேலூர் சார்பனாமேட்டில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். 
    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு என்றுமே நிறுத்தாது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்க விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். நடப்பாண்டில் ஆங்கில வழிக் கல்வியில் 67 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். எந்தப் பள்ளியையும் மூடுவதற்கான திட்டங்கள் இல்லை. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ரூ. 1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
    வேலூரில் உருது பேசும் மாணவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் வெள்ளிக்கிழமை மாலைக்குள் உருது பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். சிறுபான்மை மக்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது. அவர்களின் இடர்களைத் தீர்க்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
    அப்போது, பல அமைச்சர்கள் இருந்தும் பாலாற்றில் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையை தடுக்க முடியவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆந்திர மக்கள் தமிழகத்திலும், தமிழக மக்கள் ஆந்திரத்திலும் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக வடமாவட்டங்களில் தெலுங்கு மொழி பேசுவோர் அதிக அளவில் உள்ளனர். அதேபோல், ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் தமிழ் பேசுவோர் அதிக அளவில் வசிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் அண்டை மாநிலத்துடன் சுமுகமாக பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். 
    இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஒரு சில நாள்களில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பார். மேலும், மற்ற மாநிலங்களுடனான நதிநீர் பங்கீட்டுப் பிரச்னையில் நீதிமன்ற வழக்குகளின் மூலம் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai