Enable Javscript for better performance
பின்தங்கிய நிலையில் மாணவர்களின் வாசிப்புத்திறன்: விளக்கமளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பின்தங்கிய நிலையில் மாணவர்களின் வாசிப்புத்திறன்: விளக்கமளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 25th July 2019 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு முடித்து 6-ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களிடம் ஆய்வு நடத்திய கல்வித்துறை அலுவலர்கள், அந்த மாணவர்களின் வாசிப்புத்திறன் பின்தங்கிய நிலையில் இருந்ததைக் கண்டறிந்தனர். 
    அந்த மாணவர்கள் 5-ஆம் வகுப்பு வரை படித்த தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் வாசிப்புத்திறன் குறைபாடு தொடர்பாக உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர். 
    நடப்பு 2019-2020-ஆம் கல்வியாண்டில் வேலூர் வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயின்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் குறித்த ஆய்வு அண்மையில் நடத்தப்பட்டது. 
    இதில் மாவட்டம் முழுவதும் பல மாணவர்களின் வாசிப்புத்திறன் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது தெரிய வந்துள்ளது. 
    இதையடுத்து அந்த மாணவர்கள் படித்த தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களின் வழிகாட்டுதல்படி வட்டார கல்வி அலுவலர்கள் ஓர் உத்தரவை அனுப்பியுள்ளனர்.
    அதில், மாணவர்களின் வாசிப்புத்திறன் பின்தங்கிய நிலையில் இருப்பது மிகவும் வருந்தத்தக்க செயல்பாடாக உள்ளது. 
    எனவே தங்கள் பள்ளியில் குறிப்பிட்ட இந்த மாணவர்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளாக கல்வி போதித்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைபாட்டிற்கான தக்க விளக்கத்தை 7 நாள்களுக்குள் அளிக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    தற்போது இந்த உத்தரவு நகல்கள் சோளிங்கர் வட்டாரத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களில் உள்ள 45-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் விரைவில் அனுப்பப்பட உள்ளதாக இந்த கல்வி மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai