28 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக முதன்முறையாக ஒரு மாத காலம் பரோலில்
28 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக முதன்முறையாக ஒரு மாத காலம் பரோலில் வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டார். 
ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நளினி, அவரது கணவர் முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில், நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இத்தம்பதியின் மகளான ஹரித்ரா (26), கடந்த 1992-ஆம் ஆண்டு வேலூர் பெண்கள் சிறையில் பிறந்தார். தொடர்ந்து, 3 ஆண்டுகள் சிறையில் நளினியுடன் வளர்ந்த ஹரித்ரா, பிறகு கோவையிலுள்ள உறவினர் வீட்டில் 3 ஆண்டுகளும், பின்னர் இலங்கையில் 5 ஆண்டுகளும் வளர்ந்தார். இதையடுத்து லண்டனில் உள்ள முருகனின் சகோதரர் வீட்டில் தங்கிப் படித்து வந்த ஹரித்ரா தற்போது மருத்துவப் பட்டம் பெற்று அங்கேயே பணியாற்றி வருகிறார்.
தனது மகள் ஹரித்ராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய தன்னை 6 மாதம் பரோலில் விடுவிக்கக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், நளினியை ஒரு மாத காலம் பரோலில் விடுவிக்க கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது. அவருக்குத் தாயார் பத்மாவதி, உறவினர் சத்தியா  ஆகியோர் ஜாமீன் அளித்திருந்தனர். தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக நளினியை பரோலில் விடுவிப்பதில் தாமதம் நிலவி வந்தது. 
இந்நிலையில், நளினி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் பரோலில் விடுவிக்கப்பட்டு, வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வரப்பட்டார். 
பின்னர், அவர் வேலூர் ரங்காபுரம் புலவர் நகரிலுள்ள திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலர் சிங்கராயர் வீட்டுக்கு காவல் துறை வேனிலேயே அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிங்கராயர் வீட்டில் தனது தாயார் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரர் பாக்கியநாதன் ஆகியோருடன் ஒரு மாதம் தங்கியிருக்கும் நளினி, அவரது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க உள்ளார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த நளினி, ஆரஞ்சு நிற பட்டு சேலை அணிந்து தலையில் மல்லிகை பூ வைத்தபடி உற்சாகமாக இருந்தார். ஆனால், சிங்கராயர் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நளினியை அவரது தாயார் பத்மாவதி ஆரத்தி எடுத்து வரவேற்றபோது, இருவரது கண்களிலும் நீர்ததும்ப காணப்பட்டனர். 
ரங்காபுரத்தில் ஒரு மாத காலம் தங்கியிருக்கும் நளினி அரசியல் பிரமுகர்களை சந்திக்கவோ, செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கவோ கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதால் அவர் யாரையும் சந்திக்கவில்லை. அவர் தங்கியிருக்கும் வீட்டைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1991-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட நளினி, அவரது தந்தை சங்கரநாராயணன் மறைவை அடுத்து 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்க 12 மணி நேரமும், அதன்பிறகு 14-ஆவது நாள் துக்க நிகழ்வுக்காக ஒரு நாளும் சிறப்பு பரோலில் வெளியே அழைத்து வரப்பட்டார். அதற்குப் பிறகு 28 ஆண்டுகளில் இப்போதுதான் சாதாரண பரோலில் ஒரு மாத காலம் விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com