அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்
By DIN | Published On : 01st June 2019 06:44 AM | Last Updated : 01st June 2019 06:44 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, இலவச பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப் புத்தகங்களை அனுப்பும் பணி ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை கல்வி மாவட்டத்தில் வாலாஜாபேட்டை, ஆற்காடு, சோளிங்கர், திமிரி ஆகிய ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 652 பள்ளிகள் உள்ளன. அந்தந்தப் பள்ளிகளுக்கு ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிடங்கில் இருந்து பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனைத்தும் அனுப்பப்பட்டு, பள்ளி தொடக்க நாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்பட உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.