ஆம்பூரில் சட்டப்பேரவை உறுப்பினர் லுவலகம் மைக்க தொடர் கோரிக்கை

ஆண்டுக்கு ரூ.2000 கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் ஆம்பூரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என இத்தொகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


ஆண்டுக்கு ரூ.2000 கோடி அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் ஆம்பூரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என இத்தொகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு 1957-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம்பூர் தொகுதி இரட்டை உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தது.  அதைத் தொடர்ந்து 1962 முதல் 1977 வரை தனித் தொகுதியாக இருந்தது.  அதன்பின் வாணியம்பாடி தொகுதியுடன் ஆம்பூர் தொகுதி இணைக்கப்பட்டது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக  தொகுதி மறுசீரமைப்பில் மீண்டும் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி (பொது)  உருவாக்கப்பட்டது.  
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினராக மனித நேய மக்கள் கட்சியின் அ. அஸ்லம் பாஷா வெற்றி பெற்றார்.  புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகையால் ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கான தொகுதி அலுவலகம் இல்லை. தொகுதி அலுவலகம் கேட்டு அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்று ஆம்பூர் நகருக்குள் ஏதேனும் இடம் இருந்தால் அதனைத் தேர்வு செய்து தருமாறு பொதுப்பணித் துறை அவரிடம் தெரிவித்தது.  அவரும் நகராட்சி பயணியர் விடுதி உள்பட பல்வேறு இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.  ஆனால் அவர் தேர்வு செய்த இடங்களில் பல சிக்கல்கள் இருந்ததால் அங்கு அலுவலகம் அமைக்க முடியவில்லை.
 சிக்கல் ஏதும் இல்லாத இடம் நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்ததால் அந்த இடங்கள் தேர்வு செய்யப்படவில்லை. அதனால் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.    அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினருக்கான அலுவலகத்தை அவர் தனது கட்சி அலுவலகத்தில் அமைத்துக் கொண்டார். 
இதனால் மாற்றுக் கட்சியினர் அவரைச் சந்திக்கச் செல்வதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.
2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த ஆர். பாலசுப்பிரமணி சட்டப்பேரவை உறுப்பினரானார். இவரும் ஆம்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்.  ஆனாலும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை தன்னுடைய சொந்த அலுவலகத்தில் அமைத்துக் கொண்டு பொதுமக்களை அங்கே சந்தித்து வந்தார்.  
அரசியலுக்கு அப்பாற்பட்டு பலதரப்பட்ட கட்சியினர் சட்டப்பேரவை உறுப்பினரை சந்தித்து தங்களுடைய பகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 பொதுமக்களும் தங்களுடைய குறைகளைத் தெரிவிக்க, தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டுப் பெற சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலகத்திற்கு செல்லாமல் அவரது சொந்த அலுவலகத்துக்குச் செல்வது ஒருவித தயக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.  
ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இருமுறை பொதுத் தேர்தலும், ஒருமுறை இடைத் தேர்தலும் நடந்து முடிந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி அலுவலகம் அமையாமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருப்பதாக அனைத்துத் தரப்புப் பொதுமக்களும் கூறுகின்றனர்.  
ஆம்பூர் தொகுதிக்கு அண்மையில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த அ.செ. வில்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.  
அவர் பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்க வேண்டியுள்ளது.  மேலும் ஆம்பூர் நகராட்சி மற்றும் பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பெறுவதற்கு அவரை சந்திக்க வேண்டியுள்ளது.   இத்தகைய சூழ்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைய வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகமும்,  தற்போது இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினரும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்பது அனைத்து தரப்பு மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினரின் கோரிக்கையாகும். 
ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ. வில்வநாதன் (படம்) கூறியது:
 தொகுதி மக்களைச் சந்திக்க ஆம்பூரில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைய வேண்டியது அவசியம். அலுவலகம் அமைப்பது குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தற்காலிகமாக ஆம்பூர் புறவழிச் சாலையில் உள்ள கல்வி நிறுவன வணிக வளாகத்தில் அமைந்துள்ள என்னுடைய சொந்த அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு விரைவில் பொதுமக்களைச் சந்திப்பேன்.
ஆண்டுக்கு ரூ.2000 கோடி அந்நியச் செலாவணி
ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து ஆண்டுக்கு ரூ.2000 கோடி மதிப்புள்ள தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காலணிகள், ஷூக்கள், பர்ஸ்கள், ஹேண்ட் பேக்குகள் ஆகியவை தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது தவிர நாடு முழுவதும் விற்பனைக்கும் அனுப்பப்படுகின்றன.
  இது தவிர நினைத்தாலே நாவில் நீர் ஊற வைக்கும் பிரியாணியின் பிறப்பிடமும் ஆம்பூர்தான். இப்போதும் தமிழகம், கேரளம், ஆந்திரம்  மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஆம்பூர் பிரியாணிக் கடைகள் நீக்கமற நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆம்பூர் பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள்
ஆம்பூர் தொகுதியில் ஆம்பூர் நகராட்சி மற்றும் 3 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் சுமார் 2.24 லட்சம்.
ஆம்பூர் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் ஆம்பூர் நகரம், மாதனூர் ஒன்றியம், பேர்ணாம்பட்டு மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களில் 60 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.
ஆம்பூர் நகரில் 36 வார்டுகள், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகள், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 17 ஊராட்சிகள், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 8 ஊராட்சிகள்  அடங்கியுள்ளன.
ஆம்பூர் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: ஆம்பூர் நகரம், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செங்கிலிகுப்பம், மின்னூர், சோலூர், ஆலாங்குப்பம், விண்ணமங்களம், கன்னடிகுப்பம், பெரியாங்குப்பம்,  நாயக்கனேரி வடபுதுப்பட்டு, கீழ்முருங்கை, வெங்கிளி குளித்திகை, தோட்டாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்களம், பள்ளிகுப்பம், பாலூர், திருமலைகுப்பம், அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், வேப்பங்குப்பம், குப்பம்பட்டு, ராமநாயனிகுப்பம், அரிமலை, சின்னபள்ளிகுப்பம் பாக்கம்பாளையம், தென்புதுப்பட்டு, ஆசனாம்பட்டு, கல்லப்பாறை ஊராட்சிகள்.
பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரங்கல்துருகம், கொல்லகுப்பம், ஈச்சம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், வடசேரி, பாப்பனப்பள்ளி, மேல்சாணாங்குப்பம், வீராங்குப்பம், தென்னம்பட்டு, மலையாம்பட்டு, கதவாளம், மோதகப்பள்ளி, கரும்பூர், குமாரமங்கலம், பார்சனாப்பள்ளி, வெங்கடசமுத்திரம், மிட்டாளம், தேவலாபுரம்  ஊராட்சிகள்.
ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெளத்திகாமணிபென்டா, மதனாஞ்சேரி, இளையநகரம், சம்மந்திகுப்பம், கிரிசமுத்திரம், நெக்னாமலை ஊராட்சிகள் ஆம்பூர் தொகுதியில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com