மாணவிகள் பள்ளிக்கு இறுக்கமான மேல்சட்டை, லெகின்ஸ் அணிந்து வரக் கூடாது: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவிகள்

பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவிகள் இறுக்கமான மேல்சட்டை, லெகின்ஸ் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது என்று அனைத்து தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளன. முதல் நாளே மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை: 
மாணவ, மாணவிகள் பள்ளிக்கு காலை 9.15 மணிக்குள் வந்துவிட வேண்டும். சைக்கிளைத் தவிர மோட்டார் பைக், மொபட்களில் வரக் கூடாது. செல்லிடப்பேசிகளையும், பிற மின்சாதனப் பொருள்களையும் கொண்டு வரக் கூடாது. மீறி எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவ்வாறு பறிமுதல் செய்யும் பொருள்களை மீண்டும் வழங்கக் கூடாது. நவீனம் என்ற பெயரில் தலைமுடியை பலவிதமாக வெட்டிக் கொண்டும், வண்ண சாயம் பூசிக் கொண்டு இல்லாமல் மாணவர்கள், காவலர்கள் போன்று முடி வெட்டி வரவேண்டும். அரைக்கை சட்டை, டவுசர், பேண்ட் மட்டுமே அணிய வேண்டும். பள்ளி வளாகத்தில் சீருடைகள் கட்டாயம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
மாணவிகள் பாரம்பரியமான முறையில் தைக்கப்பட்ட சீருடைகளை அணிந்து வர வேண்டும். இறுக்கமான பேண்ட், மேல்சட்டை, லெகின்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பிறந்த நாள் என்ற பெயரில் பள்ளிக்குள் சீருடைகளை அணியாமல் வரக் கூடாது. உடல் தெரியும்படியும் ஆடைகளை அணியக் கூடாது என 14 வகையான வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com