மின் கம்பிகள் உரசியதில் தீப்பொறி விழுந்து குடிசை வீடு எரிந்து சேதம்
By DIN | Published On : 09th June 2019 12:10 AM | Last Updated : 09th June 2019 12:10 AM | அ+அ அ- |

ஜோலார்பேட்டை அருகே மின் கம்பிகள் உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி விழுந்து கூரை வீடு எரிந்து நாசமானது.
ஜோலார்பேட்டையை அடுத்த லாரி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). அவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் படுகாயம் ஏற்பட்டது. இதற்காக அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தருமபுரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமலிங்கத்துக்கு மலர் என்ற மனைவியும், பரத், மோனிஷா என்ற குழந்தைகளும் உள்ளனர். அவரது கால் அறுவை சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனைவரும் தருமபுரி மருத்துவமனையில் இருந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் பலத்த காற்று வீசியதில், ராமலங்கத்தின் வீட்டுக்கு அருகில் உள்ள மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டது. அது பூட்டியிருந்த அவரது குடிசை வீட்டின் மீது விழுந்தது. இதனால் வீடு முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும், அதற்குள் குடிசை வீட்டிற்குள் இருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாகி விட்டன. வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், 3 சவரன் நகைகள், குடும்பத்தினர் மூன்று பேரின் பாஸ்போர்ட், பிள்ளைகளின் கல்விச் சான்றிதழ்கள், ரூ.1 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் கெüரிசங்கர், கிராம நிர்வாக அலுவலர் நந்தன், உதவியாளர் பழனி ஆகியோர் ராமலிங்கத்தின் வீட்டிற்கு சனிக்கிழமை சென்றனர். அவரது மனைவி மலரிடம் அரிசி, பருப்பு, எண்ணெய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.